ADDED : ஆக 11, 2025 04:27 AM

மதுரை : தமிழகத்தில் 8,000க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகளுக்கான அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமல், 'பைல்'கள் நிலுவையில் உள்ளதால், இயக்குநரகம் மீது தனியார் பள்ளி நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழகத்தில் 13,000க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகளில், 62 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளிகள், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும் என்பது நடைமுறை.
இதற்காக கட்டட உறுதித்தன்மை, கட்டட உரிமம், தீயணைப்பு, தடையில்லா சுகாதார சான்றுகள் பெற்று, டி.இ.ஓ., அலுவலகங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். டி.இ.ஓ., அலுவலகங்களில் இருந்து இயக்குநர் அலுவலகம் செல்வதற்குள், பல்வேறு இடையூறுகளை தனியார் பள்ளி உரிமையாளர்கள் சந்திக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக, அங்கீகாரம் புதுப்பிக்க டி.இ.ஓ., அலுவலகங்களில் விண்ணப்பித்தாலும், பள்ளி நிர்வாகிகள், இயக்குநர் அலுவலகம் சென்று பார்க்க வேண்டியவர்களை பார்த்தால் தான், டி.இ.ஓ., அலுவலகங்களில் இருந்தே 'பைல்'கள் நகரும்.
இயக்குநர் அலுவலகத்தில் இருந்து தகவல் வராத எந்த பள்ளியின் 'பைல்'களையும், இணை இயக்குநர், இயக்குநருக்கு அனுப்பி வைக்கக்கூடாது என, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
தனியார் பள்ளிகளுக்கு, 2018 முதல் உள்ளூர் திட்டக் குழும ஒப்புதல் பெற வேண்டும் என்ற உத்தரவு பெரும் சவாலாக உள்ளது. இந்த உத்தரவு பிறப்பித்து ஏழு ஆண்டுகளாகியும், டி.டி.சி.பி., இதுவரை உரிய வழிகாட்டுதல்களை வெளியிடவில்லை. இதனால், நகர்ப்புற பள்ளிகள் கடும் பாதிப்பை சந்திக்கின்றன. இது குறித்து, அமைச்சர், இயக்குநர் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும், நடவடிக்கை இல்லை என்பது தனியார் பள்ளிகளின் குற்றச்சாட்டு.
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மாநில தலைவர் ஆறுமுகம் கூறியதாவது:
தற்போதைய நிலையில் 8,000 பள்ளிகள் 2022, 2023ல் இருந்து அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமல் இயங்குகின்றன. அ.தி.மு.க., ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு மண்டல வாரியாக முகாம் நடத்தி, அங்கீகாரம் புதுப்பிப்பை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நேரில் வழங்கினர். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், ஒரு முறை தான் அதுபோன்ற முகாம் நடத்தப்பட்டது.
தற்போது, தனியார் பள்ளிகள் இயக்குநர் அலுவலகம் ஏன் தாமதப்படுத்துகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. முறையான புதுப்பித்தல் இல்லாத பள்ளிகளில் ஏதாவது ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டால், நிர்வாகம் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
கடைசியாக, 'அங்கீகாரம் இல்லாத பள்ளி' என்ற பெயருடன் அதிகாரிகள், 'சீல்' வைத்து விடுகின்றனர். ஆனால், அதே அதிகாரிகள் தான் அங்கீகாரம் புதுப்பித்தல் நடவடிக்கைகளை இழுத்தடிக்கின்றனர் என்பது வெளியே தெரிவதில்லை. எனவே, இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.