ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் நெருக்கும் கூட்டணியினர்: தயங்கும் தி.மு.க.,
ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் நெருக்கும் கூட்டணியினர்: தயங்கும் தி.மு.க.,
ADDED : ஆக 08, 2025 03:50 AM

ஆணவ கொலைகளை தடுக்கும் சிறப்பு சட்டத்தை கொண்டு வந்தால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, உயர் வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் ஓட்டு வங்கியில் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் தி.மு.க., தயக்கம் காட்டி வருகிறது.
ஆனால், சட்டத்தை கொண்டு வருமாறு, தி.மு.க., கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுக்கின்றன.
முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம், இ.கம்யூ., மாநில செயலர் முத்தரசன் ஆகியோர் சமீபத்தில் சந்தித்தனர். அப்போது, ஆணவ கொலை தடுப்பு சட்டத்தை, உடனடியாக கொண்டு வருமாறு வலியுறுத்தி மனு கொடுத்தனர். அவர்களிடம், பரிசீலிப்பதாக முதல்வர் கூறி உள்ளார்.
இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
ஆணவ கொலையை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டு வந்தால், பட்டியலின மக்கள் தவிர்த்து, மற்ற சமுதாய மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தக் கூடும். இது தேர்தலில் தி.மு.க.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
மேலும், ஆணவ கொலைகளை தடுக்க சட்டம் கொண்டு வந்தாலும், பிரச்னைக்கு அது தீர்வாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏனெனில், தற்போது எஸ்.சி., -- எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், கடுமையான பிரிவுகள் உள்ளன. ஜாதி பெயரை சொல்லி திட்டினாலே, கடுமையான தண்டனை உண்டு.
அச்சட்டம் இருந்தும், ஜாதி பெயரை கூறி திட்டும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. எனவே, சிறப்பு சட்டம் கொண்டு வந்தாலும், ஆணவ கொலைகள் நடக்காது என்று உறுதியாக கூற முடியாது. எனவே, சட்டம் இயற்றுவதா அல்லது குழு அமைத்து காலம் தாழ்த்துவதா என ஆலோசனை நடக்கிறது.
தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., மற்றும் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க., போன்ற கட்சிகள் இணைய பேச்சு நடைபெறுகிறது.
அக்கட்சிகள் தி.மு.க., அணிக்கு வந்தால், தங்களுக்கான தொகுதி எண்ணிக்கை குறைந்து விடக்கூடாது என, தற்போது கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கருதுகின்றன.
எனவே, தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுக்கின்றன. அப்படித்தான், ஆணவ கொலை தடுப்பு சட்டம் கேட்டு அழுத்தம் கொடுக்கின்றன.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -