UPDATED : அக் 08, 2024 05:23 AM
ADDED : அக் 08, 2024 01:09 AM

'சென்னையில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விசாரிக்கவும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், உயர்மட்ட விசாரணை வேண்டும்' என, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
அதன் விபரம்:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: விமானப்படை சாகச நிகழ்ச்சியில், 17 லட்சம் பேர் ஒரே இடத்தில் கூடினாலும், கூடிய இடத்தில் மரணமில்லை; வெளியே சென்ற இடத்திலும் மரணமில்லை.
ஏற்பட்ட ஒரு மரணமும், அந்த நபர் சில பானம் சாப்பிட்டு இருக்கிறார் என தெரிய வந்தது.
அதை தற்போது கொச்சைப்படுத்த விரும்பவில்லை.
மீதமுள்ள நான்கு பேரும், இரு சக்கர வாகனங்களை எடுக்கச் சென்றபோது, நீர்ச்சத்து குறைவால் இறந்துஉள்ளனர். இதை அரசியலாக்க விரும்பவில்லை. இனி வரும் காலங்களில் இதுமாதிரி நிகழ்வுகள் நடக்கும் போது, மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
தேவைப்பட்டால் விசாரணை கமிஷன் அமைத்து, எதற்காக உச்சி வெயிலில் விமானப் படையினர் சாகசம் செய்தனர் என்பதையும், வெயில் தாக்கம் இருக்கும் நேரத்தை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும்.
வி.சி., தலைவர் திருமாவளவன்: இந்த சாவுகள் கூட்ட நெரிசலால் ஏற்படவில்லை; வெயிலின் தீவிரத்தால் உண்டான நீர்ச்சத்து குறைவு காரணமாகவே ஏற்பட்டிருக்கின்றன. வெயிலின் கொடுமையால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது குறித்து, இன்னும் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டில் குறைபாடுகள் ஏதும் இருந்ததா என்பதை விசாரித்து, அதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன்: 'உரிய நேரத்தில் குடிநீர் எடுத்துக் கொள்ளாமல், அதனால் ஏற்பட்ட வெப்பவாதம் உயிரை பறித்திருக்கலாம்' என, கூறப்படுகிறது.
அரசு மருத்துவமனையில் 4,000 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு, டாக்டர்கள் தயார் நிலையில் இருந்ததாக அரசு கூறியுள்ளது.
இருப்பினும், வெப்பவாத அபாயம் பற்றிய எச்சரிக்கை முன்பே விடப்பட்டதா; மக்கள் கூடி பார்வையிடும் இடங்களில், குடிநீர் வசதிகள் உரிய முறையில் செய்யப்பட்டதா என்ற கேள்விகள் பொதுவாக எழுந்துள்ளன. எனவே, இது தொடர்பாக, உயர்மட்ட விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.
பா.ம.க., தலைவர் அன்புமணி: நிகழ்ச்சியை காண, 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவர் என, விமானப்படை அதிகாரிகள் கூறி வந்தனர்.
அதை எதிர்பார்த்து தேவையான ஏற்பாடுகளை கூட செய்ய முடியாத தமிழக அரசு, பாதுகாப்பு துறையினர் கேட்ட ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து விட்டதாக, பழியை அவர்கள் மீது போட்டு தப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறது.
ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கடமையிலிருந்து தவறிய தமிழக அரசு தான் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
தி.மு.க., - எம்.பி., கனிமொழி: சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த மக்கள், கூட்ட நெரிசலால் அவதியுற்றதுடன், வெப்பநிலையும் அதிகமாக இருந்ததால், ஐந்து பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள் இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.
- நமது நிருபர் -

