ADDED : பிப் 23, 2024 02:00 AM

யானை, புலிகள் திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டில் தமிழகத்திற்கு, இரண்டு தவணையாக, 12.98 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
தனித்தனியாக செயல்பட்டு வந்த யானைகள் பாதுகாப்பு, புலிகள் பாதுகாப்பு திட்டங்களை, ஒரே பிரிவின் கீழ் ஒருங்கிணைக்க, கடந்தாண்டு மத்திய அரசு உத்தரவிட்டது.
திட்டங்களை ஒருங்கிணைத்தால், ஏதாவது ஒரு திட்டத்துக்கு மட்டுமே கூடுதல் முன்னுரிமை கிடைக்கும்; இன்னொரு திட்டம் முக்கியத்துவம் இழக்கும் என, தமிழக வன உயிரின ஆர்வலர்களிடம் அச்சம் எழுந்தது.
இதுகுறித்து, யானைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள, 'எலபஸ் மாக்ஸிமஸ் இண்டிகஸ்' அறக்கட்டளை நிர்வாகி தீபக் நம்பியார் கூறியதாவது:
யானைகள் திட்டமும், புலிகள் திட்டமும், குறிப்பிட்ட சில நோக்கங்கள் அடிப்படையில், தனித்தனியாக துவக்கப்பட்டன. இவற்றை நிர்வாக வசதிக்கான ஒருங்கிணைத்தது நல்லதல்ல.
நிதி ஒதுக்கீடு வேறுபாடுகளை பிரித்துப் பார்த்து, நிதியை பெற சிரமம் ஏற்படும். ஒரே சமயத்தில், ஒருங்கிணைந்த முறையில் நிதி ஒதுக்கப்படுவதால், இதை மாநில அரசுகள் பயன்படுத்துவதிலும் சிக்கல் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, தமிழக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''யானைகள், புலிகள் திட்டங்களுக்கான நிதியை தனித்தனியாக பெற்று வந்தோம்.
இத்திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில், 2023 - 24ம் நிதி ஆண்டில், ஒருங்கிணைந்த முறையில் முதல் தவணையாக, 6.55 கோடி ரூபாய்; 2வது தவணையாக, 6.43 கோடி ரூபாய் என மொத்தம், 12.98 கோடி ரூபாய் நிதி வந்துள்ளது,'' என்றார்.
- நமது நிருபர் -