கூட்டணி கட்சிகளுக்கு 'சீட்'களை குறைக்குது தி.மு.க., : சொந்த சின்னத்தில் போட்டியிடவும் அனுமதி
கூட்டணி கட்சிகளுக்கு 'சீட்'களை குறைக்குது தி.மு.க., : சொந்த சின்னத்தில் போட்டியிடவும் அனுமதி
ADDED : ஜன 04, 2024 10:00 PM

தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், அதிக பட்சமாக காங்கிரசுக்கு ஐந்தும், கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு, தலா ஒன்று வீதம் தொகுதிகள் ஒதுக்க திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த, 2019 லோக்சபா தேர்தலில் இருந்து நீடிக்கும், தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. 2021 சட்டசபை தேர்தலை தொடர்ந்து, அடுத்த ஆண்டில் நடக்க உள்ள லோக்சபா தேர்தலிலும், போட்டியிட கூட்டணி தயாராகி வருகிறது.
விரிவான பேச்சு
இதற்கிடையில், பா.ம.க., மக்கள் நீதி மய்யம் கட்சிகளை சேர்த்து, கூட்டணிக்கு கூடுதல் வலு சேர்க்கும் திட்டம், தி.மு.க.,வுக்கு உள்ளது.
ஆங்கில புத்தாண்டு அன்று, சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை, அவரது வீட்டில் சந்தித்த, தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு, இது தொடர்பாக விரிவாக பேசியுள்ளார்.
அதாவது, புதிய வரவுகளுக்கு இடம் தரும் வகையில், கூட்டணி பங்கீட்டில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றும், அதற்கு காங்கிரஸ் ஒத்துழைக்க வேண்டும் என்றும், சிதம்பரத்திடம் அவர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக, காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
இந்த முறை கூட்டணி விரிவடைவதால், ஏற்கனவே உள்ள கட்சிகள் தங்கள் எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்ள வேண்டும் என, தி.மு.க., விரும்புகிறது. குறிப்பாக, காங்கிரசுக்கான தொகுதிகளில் கைவைக்க எண்ணுகிறது.
அதாவது, தி.மு.க., கூட்டணிக்குள் பா.ம.க., வருமானால், அக்கட்சி கேட்கும் நான்கு தொகுதிகளை கொடுத்தாக வேண்டும். அந்த நான்கை, காங்கிரஸ் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது தான், தி.மு.க.,வின் எதிர்பார்ப்பு.
அப்படிப் பார்த்தால், காங்கிரசுக்கு ஐந்து தொகுதிகளே கிடைக்கும். இதனால், காங்கிரஸ் வேறு எந்த முடிவும் எடுத்து விடக்கூடாது என்பதற்காக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகளின் பங்கிலும், கைவைக்கப் போவதாகவும் தி.மு.க., கூறியிருக்கிறது.
செலவுக்கு பணம்
அதாவது, மீதமுள்ள இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா ஒன்று தான் என்பதே, தி.மு.க.,வின் கணக்கு.
முரண்டு பிடித்தால், ராஜ்யசபாவில் இடமளித்தும், லோக்சபா தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்தும், அக்கட்சிகளை சரிக்கட்டி விடலாம் என்றும் கருதுகிறது.
அதேநேரத்தில், இந்த முறை தங்கள் சின்னத்தில் தான் கூட்டணி கட்சிகள் போட்டியிட வேண்டும் என, எந்த நெருக்கடியும் கொடுக்கப் போவதில்லை என்கிறது.
அது மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சி கடந்த முறை போட்டியிட்டு வென்ற சில தொகுதிகளையும் விட்டுத் தர வேண்டும் என, சிதம்பரத்திடம் டி.ஆர்.பாலு கேட்டிருக்கிறார்.
கடந்த முறை பெரம்பலுார் தொகுதியில், ஐ.ஜே.கே., நிறுவனர் பாரிவேந்தர் தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இப்போது, அவர் கூட்டணியில் இல்லை. அந்த தொகுதியை கமலுக்கு தரப்போவதாக சொல்கின்றனர்.
கமலோ, கோவை மீது கண் வைக்கிறார். தாங்கள் ஏற்கனவே போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால், மார்க்சிஸ்ட் மறுக்கிறது. இதில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது தெரியவில்லை.
ஒதுக்க முடியாது
காங்கிரசை பொறுத்தவரை, கடந்த முறை வென்ற திருச்சி தொகுதி, இந்த முறை கிடைக்காது. திருச்சியை, காங்கிரசுக்கு ஒதுக்க முடியாது என்றே, டி.ஆர்.பாலு சொல்லி விட்டார்.
அப்படியானால், ராமநாதபுரத்தை கொடுக்குமாறு, சிதம்பரம் கேட்டிருக்கிறார். முஸ்லிம் லீக்கிடம் பேசுவதாக கூறிச் சென்றிருக்கிறார் பாலு. ஒருவேளை, பா.ம.க., வரவில்லை என்றால், காங்கிரசுக்கு கூடுதலாக இரு தொகுதிகள் கிடைக்கலாம்.
தி.மு.க.,வின் இந்த முடிவை, சோனியா, ராகுலிடம் சொல்லி, நல்ல பதில் பெற்று தரும்படி சிதம்பரத்திடம் பாலு கேட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.
- நமது நிருபர் -