ராமேஸ்வரத்தில் சர்வதேச விமான நிலையம் அவசியம்; சரக்கு போக்குவரத்து, சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும்
ராமேஸ்வரத்தில் சர்வதேச விமான நிலையம் அவசியம்; சரக்கு போக்குவரத்து, சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும்
UPDATED : மார் 22, 2025 06:08 AM
ADDED : மார் 22, 2025 05:54 AM

சென்னை : ராமேஸ்வரம் விமான நிலையம் அமைக்க, ராமநாதபுரம் மாவட்டத்தில் இடம் தேடும் பணியை, 'டிட்கோ' எனப்படும் தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் துவக்கி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி கோவில் உள்ளது. அங்கு புனித நீராடி வழிபாடு நடத்த, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
அவர்கள், ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம், தனுஷ்கோடியில் கடலில் மூழ்கிய சர்ச், ரயில் நிலையம், அரிச்சல்முனை, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு வருகின்றனர்.
ஏற்றுமதி
ராமநாதபுரத்தில் மீன்பிடி முக்கிய தொழிலாக உள்ளது. அங்கிருந்து, மீன், கருவாடு உள்ளிட்ட கடல் உணவு பொருட்கள், முக்கிய நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
கடந்த ஆண்டு பிப்ரவரியில், இரு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, ராமேஸ்வரம் வந்தார். ராமேஸ்வரம் கடல் மற்றும் கோவிலின் புனித தீர்த்த குளங்களில் நீராடி, ராமநாத சுவாமியை வழிபட்டார். அவரது வருகைக்குப் பின், ராமேஸ்வரம் வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ராமேஸ்வரம் வர விரும்புவோர், மதுரைக்கு விமானத்தில் வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் செல்ல வேண்டி உள்ளது. மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு செல்ல, மூன்று மணி நேரமாகும். ராமநாதபுரத்திற்கு சுற்றுலா பயணியர் வருகையையும் மற்றும் தொழில் முதலீடுகளையும் ஈர்க்கும் பணியில், அரசு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ராமேஸ்வரம் விமான நிலையம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பு, பட்ஜெட்டில் வெளியானது. அதைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் விமான நிலையத்திற்கு, ராமநாதபுரத்தில் இடம் தேடும் பணியில், டிட்கோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
எதிர்பார்ப்பு
அங்கு, விமான நிலையம் மட்டுமின்றி, மீன்கள் ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக, சரக்கு விமானங்களை இயக்கும் வகையில், பிரமாண்ட சர்வதேச விமான நிலையமாக, ராமேஸ்வரம் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது, தொழில் துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து, தொழில் துறையினர் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, கடலாடி, கமுதி, மண்டபம், திருவாடானை, வாலிநோக்கம் உள்ளிட்ட இடங்களில், கடல் உணவு பொருட்கள், வேளாண் பொருட்களை பதப்படுத்துதல், உப்பு, ஜவுளி, புதுப்பிக்கத்தக்க மின்சாரம், உதிரிபாக உற்பத்தி போன்ற தொழில்களில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
கிளிஞ்சலை பயன்படுத்தி, பல்வேறு கலைப் பொருட்கள் செய்யப்படுகின்றன. தென்னை நார் பொருட்கள், கடல் உணவு பொருட்கள், மீன்பிடி வலை, புதுப்பிக்கத்தக்க மின்சார தொழில்களில் புதிய முதலீடுகள் வர உள்ளன. எனவே, ராமேஸ்வரம் விமான நிலையத்தில், பயணியர் விமானம் மட்டுமின்றி, சரக்கு விமானங்களும் இயக்கப்பட வேண்டும்.
இதனால், ஓசூரில் 2,000 ஏக்கரில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதுபோல், ராமநாதபுரத்திலும், சரக்கு முனையங்களுடன் கூடிய, பெரிய விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும். இது சரக்குகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்ய உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.