ஊழலை திசை திருப்ப முயற்சி; தி.மு.க., மீது அன்புமணி குற்றச்சாட்டு
ஊழலை திசை திருப்ப முயற்சி; தி.மு.க., மீது அன்புமணி குற்றச்சாட்டு
ADDED : நவ 07, 2025 05:11 AM

தர்மபுரி: பா.ம.க., தலைவர் அன்புமணி அளித்த பேட்டி:
வாக்காளர் சிறப்பு திருத்தப் பணியை ஆய்வு செய்யும் அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள் தான். பிறகு எதற்காக தி.மு.க., பயப்படுகிறது. போலி வாக்காளர்கள், இறந்தவர்களை தேர்தலுக்கு முன்பு நீக்கினால் தான், நியாயமாக தேர்தல் நடக்கும்.
நகராட்சி துறையில் பொறியாளர்கள், அதிகாரிகள் நியமனத்தில், 885 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக, 250 பக்க குற்றச்சாட்டை அமலாக்க துறை, தமிழக காவல்துறைக்கு அளித்துள்ளது.
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டட அனுமதி வழங்கியதில் 2,000 கோடி ரூபாய் ஊழல், மணல் கொள்ளையில் 4,800 கோடி ரூபாய் ஊழல், கனிமவள கொள்ளையில் 1,000 கோடி ரூபாய் ஊழல் நடந்து உள்ளன.
இந்த ஊழல்களை திசை திருப்பவே, வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி தி.மு.க., பேசுகிறது.
தமிழகத்தில், இரு பெரிய சமூகமான, பட்டியல் இனம், வன்னியர் சமூகம் இரண்டையும் சேர்த்தால், மக்கள் தொகையில், 40 சதவீதம். இரு சமூகமும் மோசமாக உள்ளது.
இரு சமூகத்துக்கும் அரசியல் அதிகாரம் வேண்டும். ஆனால், ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக, திட்டமிட்டு இந்த இரு சமுதாயத்தை தி.மு.க., பிரித்து, சூழ்ச்சி செய்கிறது. இது, கருணாநிதி காலத்தில் இருந்தே நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அன்புமணியிடம், நேற்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அளித்த பேட்டி குறித்து கேட்டபோது, 'கருத்து சொல்ல விரும்பவில்லை' என, கூறினார்.

