பீஹாரை விட குறைவாக கல்விக்கு நிதி ஒதுக்கீடு; தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு
பீஹாரை விட குறைவாக கல்விக்கு நிதி ஒதுக்கீடு; தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு
ADDED : ஆக 26, 2025 04:23 AM

சென்னை : 'மிகவும் பின் தங்கிய மாநிலமான பீஹாரில், அம்மாநில அரசு கல்விக்கு ஒதுக்கும் நிதியை விட, தமிழக அரசு குறைவாக நிதி ஒதுக்கி உள்ளது' என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி உள்ளார்.
அவரது அறிக்கை:
மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிக் கல்வி, உயர் கல்வித் துறைகளுக்கு, மாநிலத்தின் மொத்த பட்ஜெட்டில், குறைந்தது 15 சதவீதம் ஒதுக்க வேண்டும். ஆனால் தமிழகம், 13.7 சதவீதம் மட்டுமே ஒதுக்கியுள்ளது. இந்தியாவிலேயே மிகவும் அதிக அளவாக, டில்லி அரசு, அதன் மொத்த பட்ஜெட் மதிப்பில், கல்விக்காக 24.2 சதவீதம் நிதி ஒதுக்கி உள்ளது.
இந்தியாவின் பின்தங்கிய மாநிலமான பீஹார், 21.4 சதவீதம் ஒதுக்கி உள்ளது. சுகாதாரத் துறைக்கு நிதி ஒதுக்குவதில், தமிழகம் 26ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மருத்துவ துறையின் குறைந்தபட்ச தேவைகளை நிறைவேற்ற, மொத்த செலவில், குறைந்தது எட்டு சதவீதம் ஒதுக்க வேண்டும் என, 2017ம் ஆண்டின் தேசிய சுகாதார கொள்கையில், இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
டில்லி மாநில அரசு, இந்த இலக்கை கடந்து மருத்துவத்திற்காக, 13 சதவீதம் நிதி ஒதுக்கி உள்ளது. புதுச்சேரி அரசு, 9.5 சதவீதம் செலவழிக்கிறது. ஆனால், வளர்ந்த மாநிலமாக கூறிக் கொள்ளும் தமிழகம், சுகாதாரத்திற்கு வெறும் ஐந்து சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்குகிறது.
முதன்மைத் துறையான வேளாண்மைக்கு, குறைந்தபட்சம், 6.3 சதவீத நிதி ஒதுக்க வேண்டும். ஆனால் தமிழகம், 6.1 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்குகிறது. தெலுங்கானா 20.20, சத்தீஸ்கர், 15.90, பஞ்சாப், 10.10 சதவீதம் நிதி ஒதுக்கி உள்ளன.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ஒதுக்கப்பட்டதை விட, குறைவாக கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு, தி.மு.க., அரசு நிதி ஒதுக்கி உள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல், கல்வி, சுகாதாரத் துறைகள் சீரழிந்து வருவதற்கு, தி.மு.க., அரசு போதிய நிதி ஒதுக்காததே காரணம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2024- - 2025ம் ஆண்டு பட்ஜெட்டில், மாநிலங்கள் கல்வி துறைக்கு ஒதுக்கிய நிதி ஒதுக்கீடு விபரம்:
எண் மாநிலம் நிதி ஒதுக்கீடு சதவீதத்தில்
1 டில்லி - 24.2
2 பீஹார் 21.4
3. அசாம் 19.0
4 மேகலாயா 18.5
5 சத்தீஸ்கர் 18.3
6 ராஜஸ்தான் 18.3
7 மகாராஷ்டிரா 18.2
8 ஹிமாச்சல் பிரதேசம் 16.7
9 உத்தரகாண்ட் 16.7
10 மேற்கு வங்கம் 16.6
11 புதுச்சேரி 15.5
12 மத்தியப்பிரதேசம் 15.4
13 குஜராத் 15.2
14 ஹரியானா 15.0
15 கேரளம் 14.8
16 உத்தரப்பிரதேசம் 14.7
17 ஜார்க்கண்ட் 14.5
18 ஒடிசா 14.2
19 மிசோராம் 13.7
20 கர்நாடகா 13.7
21 ஆந்திரா 13.7
22 தமிழகம் 13.5