டில்லியில் அன்புமணி முகாம்; பா.ம.க.,வில் திடீர் பரபரப்பு
டில்லியில் அன்புமணி முகாம்; பா.ம.க.,வில் திடீர் பரபரப்பு
ADDED : ஜூலை 01, 2025 12:30 AM

சென்னை, : பா.ம.க., நிறுவனர் ராமதாசுடன் மோதல் ஏற்பட்ட நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி, டில்லியில் முகாமிட்டுள்ளார்.
பா.ம.க.,வில் அப்பா -- மகன் இடையிலான மோதல் நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது. ஒருவர் நிர்வாகியை நீக்கியும், மற்றொருவர் அவர் நீடிப்பார் என்றும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
'செயல் தலைவர் பதவியை அன்புமணி ஏற்றால் மட்டுமே, இப்பிரச்னை முடிவுக்கு வரும்' என ராமதாஸ் உறுதியாக கூறி வருகிறார்.
'வயது முதிர்வால், ராமதாஸ் குழந்தை போல மாறிவிட்டார்; அவரை சுற்றி மூன்று தீய சக்திகள் உள்ளன. பா.ம.க., தலைவரான தனக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது' என அன்புமணி கூறி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அன்புமணி டில்லி சென்றார். இது, பா.ம.க.,வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக பா.ம.க., நிர்வாகிகளிடம் கேட்டபோது, 'அன்புமணியின் ராஜ்யசபா எம்.பி., பதவி, வரும் 24ல் நிறைவு பெறுகிறது. வரும் 21ல் பார்லிமென்ட் கூட்டத்தொடர் துவங்குகிறது.
எம்.பி., பதவி முடிவதால், அதற்கு முன், டில்லியில் முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோரை அன்புமணி சந்திக்க வாய்ப்புள்ளது' என்றனர்.
'பா.ம.க., அமைப்பு விதிகளின்படி, தலைவருக்குதான் பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் உள்ளது' என அன்புமணி கூறி வருகிறார். பொதுச்செயலர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமாவை நீக்கிவிட்டு, புதியவர்களை கட்சி நிர்வாகிகளாக ராமதாஸ் நியமித்துள்ளார். பொதுக்குழுவை கூட்டவும் ராமதாஸ் தயாராகி வருகிறார்.
பா.ம.க., தலைவராக தானும், பொதுச்செயலராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா ஆகியோர் தொடர்வதாகவும் தேர்தல் ஆணையத்திடம் அன்புமணி கடிதம் அளிக்க இருப்பதாகவும், அப்போது மாவட்டச் செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டியலை கொடுக்க இருப்பதாகவும் பா.ம.க.,வினர் தெரிவித்தனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ராமதாசை சந்தித்ததும், வி.சி., தலைவர் திருமாவளவன், ராமதாசை புகழ்ந்து பேசுவதும், தி.மு.க.,வின் சூழ்ச்சி என அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சூழ்ச்சியை உடைப்பதோடு, பா.ஜ.,வுடன் பேசி, அ.தி.மு.க., கூட்டணியில் வலுவான கட்சியாக இணையவும் சில ஏற்பாடுகளை செய்யவே, அவர் டில்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.