ADDED : ஆக 04, 2025 04:21 AM

பா.ம.க., தலைவர் அன்புமணியின் பொதுக் குழுவுக்கு சட்ட ரீதியாக தடை பெற, அவரது தந்தை ராமதாஸ் ஆலோசித்து வருகிறார்.
பா.ம.க., நிறுவனர் ராமதா ஸ் மற்றும் தலைவர் அன்புமணி இருவருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், 'தமிழக மக்கள் உரிமை மீட்பு' பெயரில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார் அன்புமணி. அதற்கு தடை விதிக்கக்கோரி, டி.ஜி.பி.,யிடம் மனு அளித்ததோடு, உள்துறை செயலருக்கும் ராமதாஸ் மனு அளித்தார்.
இந்நிலையில், வரும் 17ல் திண்டிவனம் அருகே பட்டானுாரில், பா.ம.க., சிறப்பு பொதுக்குழு நடத்தப்போவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். இதற்கு போட்டியாக, வரும் 9ல், மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டுவதாக அன்புமணியும் அறிவித்தார்.
இரு பொதுக்குழுவில் எதற்கு செல்ல வே ண்டும் என, கட்சியினர் குழப்பம் அடைந்துள்ளனர்.
பா.ம.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
பா.ம.க., சட்ட விதி 13ன்படி, பொதுக்குழு, செயற்குழு, தலைமைக்குழு கூட்டங்கள், நிறுவனரை அழைத்து, அவரது வழிகாட்டுதல்படி தான் நடத்த வேண்டும்.
அதேபோல, விதி 31ன்படி, மூன்றில் ஒரு பங்கு கட்சியினர் பொதுக்குழுவுக்கு வந்தால் மட்டும் அது செல்லுபடியாகும். இதன் படி பார்க்கும்போது, அன்புமணி கூட்டு ம் பொதுக்குழுவுக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றால், அப்பொதுக்குழுவில் ராமதாஸ் பங்கேற்க வேண்டும்; அதற்கு வாய்ப்பில்லை. அதனாலேயே, கட்சியினர் பலருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனால், அன்புமணி கூட்டும் பொதுக்குழுவுக்காக அனுப்பப்படும் தபாலை பெறக்கூட பலரும் யோசிக்கின்றனர். அதே யோசனையிலேயே சென்னையில் முகாமிட்டுள்ள ராமதாசும் உள்ளார். கூடவே, அன்புமணி கூட்டும் பொதுக்குழுவுக்கு தடை ஏற்படுத்துவது குறித்தும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகிறார்.
அன்புமணியின் தலைவர் பதவிக்கான காலம் முடிந்த நிலையில், அவரது தலைமையில் நடக்கும் பொதுக்குழு கூட்டத்துக்கு, நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு பெற, ராமதாஸ் முடிவு செய்துள்ளார். இவ்வாறு கூறினர்.
ஆலோசனையை
நிராகரிக்கலாம்: பாலு
அன்புமணி ஆதரவாளரான, பா.ம.க., செய்தித் தொடர்பாளர் பாலு கூறியதாவது:
ஆகஸ்ட் 17ல், ராமதாஸ் கூட்டும் பொதுக்குழு கூட்ட அறிவிப்பு, யார் பெயரும், கையொப்பமும் இல்லாமல் வெளியாகியுள்ளது. இது, பா.ம.க., விதிகளுக்கு எதிரானது. பொதுக்குழுவுக்கான அறிவிப்பை, பொதுச்செயலர் தான் வெளியிட வேண்டும். மாநில அளவிலான பொதுக்குழு, செயற்குழு, நிர்வாகக்குழு ஆகியவற்றுக்கு தலைமை தாங்கும் அதிகாரம், பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அன்புமணிக்கே உள்ளது.
விதி 13ன்படி, மாநில அளவிலான பொதுக்குழு போன்ற கூட்டங்களுக்கு, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அழைக்கப்பட்டு, அவரது வழிகாட்டுதலின்படி முடிவுகள் எடுக்க வேண்டும். அதன்படியே பொதுக்குழு கூட உள்ளது. கட்சி நிறுவனரின் ஆலோசனைகளை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
-- நமது நிருபர் --