கன்னியாகுமரி மாவட்டத்தை தவிர்த்த பழனிசாமி; அ.தி.மு.க.,-பா.ஜ., நிர்வாகிகள் அதிர்ச்சி
கன்னியாகுமரி மாவட்டத்தை தவிர்த்த பழனிசாமி; அ.தி.மு.க.,-பா.ஜ., நிர்வாகிகள் அதிர்ச்சி
ADDED : ஆக 04, 2025 04:32 AM

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பிரசார சுற்றுப்பயணத்தில், கன்னியாகுமரி மாவட்டம் இடம் பெறாதது, அம்மாவட்ட அ.தி.மு.க., - பா.ஜ., நிர்வாகிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க, அ.தி.மு.க., முழுவீச்சில் தயாராகி வருகிறது. தமிழகம் முழுதும், மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை, கொங்கு மண்டலத்தில் பழனிசாமி துவக்கினார். சட்டபை தொகுதி வாரியாக, 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில், மக்களை சந்தித்து வருகிறார் .
அவரது இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம், சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களுடன், வரும் 8ம் தேதி நிறைவடைகிறது.
மூன்றாம் கட்ட சுற்றுப்பயணத்தை, வரும் 11ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவக்கி, திருப்பத்துார், சென்னை புறநகர் மாவட்டங்கள் சென்று, 23ம் தேதி நிறைவு செய்ய உள்ளார்.
பழனிசாமியின் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பயணத்தில், கன்னியாகுமரி மாவட்டம் மட்டும் இடம் பெறவில்லை. கன்னியாகுமரி, நாகர்கோவில் தொகுதிகளில், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியும், பதம்நாதபுரம், விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல் தொகுதிகளில், தி.மு.க., - காங்., கூட்டணியும், கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றன.
மீண்டும் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஏற்பட்டது, அம்மாவட்ட கட்சி நிர்வாகிகளிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இக்கூட்டணியால், வரும் தேர்தலில், விளவங்கோடு, கன்னியாகுமரி, நாகர்கோவில், கிள்ளியூர் தொகுதிகளில், வெற்றி உறுதி என, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் நம்புகின்றனர்.
இந்நிலையில், பழனிசாமி கன்னியாகுமரி மாவட்டம் வராதது, இரு கட்சியினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க.,வில் பல்வேறு கோஷ்டிகள் உள்ளன. சமீபத்தில், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலர் ஜான் ஜேக்கப் மாற்றப்பட்டு, ஜெயசுதர்சன் நியமிக்கப்பட்டார். இவர் மாவட்டச் செயலரானதும், திற்பரப்பு, திருவட்டாறு பகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள், தி.மு.க., - த.வெ.க., போன்ற கட்சிகளுக்கு ஓட்டம் பிடித்துள்ளனர்.
பூ த் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம், கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் சரியாக நடக்கவில்லை. போலி உறுப்பினர்கள் சேர்க்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பழனிசாமி வந்தால், கட்சியினர் மத்தியில் கோஷ்டி சண்டை வலுக்கும் என்பதால், அங்கு வருவதை தவிர்த்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

