அன்புமணி போஸ்டர் கிழிப்பு; பா.ம.க.,வில் தொடரும் மோதல்
அன்புமணி போஸ்டர் கிழிப்பு; பா.ம.க.,வில் தொடரும் மோதல்
ADDED : ஜூன் 24, 2025 02:49 AM

திண்டிவனம்: தைலாபுரம் தோட்டத்தின் முகப்பில், 'வருங்கால தமிழகமே' என அன்புமணிக்கு முக்கியத்துவம் கொடுத்து அவருடைய ஆதரவாளர்கள் ஒட்டியிருந்த போஸ்டர், நேற்று திடீரென்று கிழிக்கப்பட்டது. இது, அன்புமணி ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கிடையில், அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்த இரண்டு எம்.எல்.ஏ.,க்களின் மாவட்ட செயலர் பதவியை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அதிரடியாக பறித்துள்ளார்.
பதவி பறிப்பு
பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் மோதல் உச்சகட்டம் அடைந்துள்ளது. ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி உள்ளிட்ட பலர் பேச்சு நடத்தியும், பிரச்னை இதுவரையில் முடிவுக்கு வரவில்லை.
கட்சியில் அதிரடி நடவடிக்கையில் இறங்க, விரைவில் பொதுக்குழு கூட்டத்தை கூட்டும் முடிவில் ராமதாஸ் திடமாக உள்ளார்.
இதற்கு பதிலடி தரும் வகையில், கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தை அன்புமணியும் அடுத்தடுத்து நடத்தி, தன் ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து பலத்தை காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
அன்புமணிக்கு ஆதரவு கொடுத்த 74 மாவட்டச் செயலர்கள், 59 மாவட்ட தலைவர்களை நீக்கிவிட்டு, புதிதாக மாவட்ட செயலர்கள், மாவட்ட தலைவர்களை நியமித்து ராமதாஸ் உத்தரவிட்டிருந்தார்.
நாளை கூட்டம்
பா.ம.க.,வில் உள்ள ஐந்து எம்.எல்.ஏ.,க்களில், பென்னாகரம் எம்.எல்.ஏ., ஜி.கே.மணி, சேலம் எம்.எல்.ஏ., அருள் ஆகியோர் ராமதாசின் பக்கம் உள்ளனர். மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார், மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் ஆகியோர் அன்புமணிக்கு ஆதரவாக உள்ளனர்.
இதனால், அன்புமணிக்கு ஆதரவாக செயல்படும் மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமாரை, கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருக்கிறார் ராமதாஸ். அவர் வகித்த, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலர் பதவியை பறித்து, செஞ்சி தொகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரை புதிய மாவட்ட செயலராக நியமித்து உள்ளார்.
அதேபோன்று, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் வகித்து வந்த சேலம் மேற்கு மாவட்ட செயலர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் தொகுதியை சேர்ந்த வெடிக்காரனுார் ராஜேந்திரன், புதிய மாவட்ட செயலராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், கட்சியின் நிறுவனரால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தைலாபுரம் தோட்டத்தில் நாளை நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் பொதுக்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.