கணக்கில் 1,300; வருவதோ 241 கன அடி; குடிநீரை திருடும் ஆந்திர விவசாயிகள்
கணக்கில் 1,300; வருவதோ 241 கன அடி; குடிநீரை திருடும் ஆந்திர விவசாயிகள்
ADDED : ஏப் 15, 2025 03:44 AM

ஊத்துக்கோட்டை: சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய்கண்டிகை - கண்ணன்கோட்டை ஆகிய நீர்த்தேக்கங்களில் தண்ணீர் இருப்பு குறைந்து வந்தது. இதனால், கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
இதை தவிர்க்க, தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி, கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீரை திறக்க வேண்டும் என, தமிழக அரசு கேட்டு கொண்டது. கடந்த 25ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு, வினாடிக்கு 1,300 கன அடி நீர் திறக்கப்பட்டது.
இந்த கிருஷ்ணா நீர், சாய்கங்கை கால்வாய் வழியே, 152 கி.மீ., பயணித்து, 28ம் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டை அடைந்தது.
இரு தினங்களுக்கு முன் வரை, வினாடிக்கு, 316 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. பின், படிப்படியாக குறைந்து, தற்போது வினாடிக்கு 241 கன அடி நீர் மட்டுமே தமிழக எல்லைக்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ஆந்திராவில் விவசாயிகள் தங்களது தேவைக்கு தண்ணீர் எடுப்பதே, தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.