நிதி நெருக்கடியில் தவிக்கும் ஆந்திரா: மோடியை சார்ந்திருக்கும் சந்திரபாபு
நிதி நெருக்கடியில் தவிக்கும் ஆந்திரா: மோடியை சார்ந்திருக்கும் சந்திரபாபு
ADDED : ஜூன் 18, 2025 12:14 AM

ஆந்திராவில், 2024ல் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தலும் நடந்தது.
'சூப்பர் சிக்ஸ்' என்ற பெயரில், ஆறு முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை அளித்து, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை வீழ்த்தி, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்.
முக்கியத்துவம்
சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்ற நிலையில், ஜனசேனா தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் துணை முதல்வரானார். அமைச்சரவையில் பா.ஜ.,வுக்கும் இடம் அளிக்கப்பட்டது.
மத்தியில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு தெலுங்கு தேசத்தின் ஆதரவு மிகவும் முக்கியம் என்பதால், மத்திய அமைச்சரவையில் அக்கட்சிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி அரசு, கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.
சட்டசபை தேர்தலில் அளித்த சூப்பர் சிக்ஸ் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலைக்கு, முதல்வர் சந்திரபாபு நாயுடு தள்ளப்பட்டுள்ளார்.
மதிப்பீடுகளின் படி, நலத்திட்டங்களுக்கு நிதியளிக்க ஆந்திர அரசு ஒவ்வொரு ஆண்டும், 1.21 லட்சம் கோடி ரூபாயை ஈட்ட வேண்டும். 2024 ஜூனில் ஆட்சிக்கு வந்த சந்திரபாபு நாயுடு, முதல்வராக பதவியேற்ற நான்கே மாதங்களில், சந்தை கடன்கள் வாயிலாக, 37,000 கோடி ரூபாய் கடன் வாங்கினார். இது நாட்டிலேயே மிக அதிகம்.
ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, ஆந்திராவில் அனைத்து இலவச நலத்திட்டங்களுக்கும், மூலதனச் செலவுகளுக்கும் கடன்கள் வாயிலாக நிதி அளிக்கப்படுகின்றன.
சொந்த வளங்கள் வாயிலாக, சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கு 88 சதவீதம் நிதி அளிக்கப்படுகிறது; 44 சதவீதம் வட்டி செலுத்தப்படுகிறது. இது ஆண்டு பட்ஜெட்டை விட மூன்றில் ஒரு பங்கு அதிகம்.
பற்றாக்குறை
முதல்வராக பதவியேற்று ஓராண்டான நிலையிலும், நிதி பற்றாக்குறையால், சூப்பர் சிக்ஸ் தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியாமல், சந்திரபாபு நாயுடு தடுமாறுகிறார்.
இதில், மூன்று சமையல் காஸ் சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் போன்ற சில வாக்குறுதிகள் ஓரளவு நிறைவேற்றப்பட்டன.
இந்தாண்டு, மார்ச் 31 நிலவரப்படி, ஆந்திர கடன்கள் 11.2 லட்சம் கோடி ரூபாயாக உள்ளன. 2024 - -25ம் நிதியாண்டில், அம்மாநிலத்தின் வருவாய், 1.82 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. எனினும், செலவு 2.3 லட்சம் கோடி ரூபாய்.
தற்போதைய கடன்களுக்கு, 2031 வரை, ஆந்திர அரசு ஒவ்வொரு ஆண்டும் 40,000 கோடி ரூபாய் வட்டி செலுத்த வேண்டும். இந்த கடன்கள், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 34.7 சதவீதம்.
இதற்கிடையே, ஆந்திராவின் மொத்த நிதி பற்றாக்குறை 4.1 சதவீதத்தை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, பரிந்துரைக்கப்பட்ட வரம்புக்கு எதிரானது.
இதனால், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற மாதந்தோறும் மத்திய அரசையே ஆந்திர அரசு முழுமையாக சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் திட்டத்துக்கு, 6,300 கோடி ரூபாய்; குழந்தைகளின் கல்வி திட்டத்துக்கு, 9,097 கோடி ரூபாய்; சமையல் காஸ் சிலிண்டர் திட்டத்துக்கு, 2,600 கோடி ரூபாய்; இலவச பஸ் திட்டத்துக்கு, 3,000 கோடி ரூபாய்.
பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை திட்டத்துக்கு, 18,000 கோடி ரூபாய் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்க, 7,200 கோடி ரூபாய் ஆந்திர அரசுக்கு தேவைப்படுகிறது.
பிரதமர் மோடியின் ஆதரவு முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும், சந்திரபாபு நாயுடுவின் ஆதரவு மோடிக்கும் தேவைப்படுவதால், ஆந்திரா கடன் வாங்க மத்திய அரசு தாராள மனப்பான்மை காட்டுகிறது.
இதை பயன்படுத்தி, ஆந்திராவும் இஷ்டத்துக்கு கடன் வாங்கி குவிக்கிறது. ஓராண்டில் மட்டும், 73,000 கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளது.
குற்றச்சாட்டு
இதனால், அதிருப்தி அடைந்த முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான தெலுங்கானா காங்., அரசு, மானியங்கள் வழங்குவதில் மட்டுமின்றி, கடன் வாங்க அனுமதிப்பதிலும் மோடி அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றஞ்சாட்டி உள்ளது.
ஆந்திராவின் கடன் சுமை அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தின் வருவாயை திரட்ட தொழில்களை ஈர்க்கவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இருந்த போதும், தற்போதைக்கு அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த பிரதமர் மோடியையே அவர் சார்ந்திருக்க வேண்டும் என்பதே உண்மை.
- நமது சிறப்பு நிருபர்-