தொகுதி பங்கீட்டில் அண்ணாமலை பார்முலா: தமிழிசை ஆதரவு
தொகுதி பங்கீட்டில் அண்ணாமலை பார்முலா: தமிழிசை ஆதரவு
UPDATED : ஏப் 23, 2025 04:57 AM
ADDED : ஏப் 23, 2025 04:39 AM

அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியில், தொகுதி பங்கீடு தொடர்பாக, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை முன்வைத்துள்ள பார்முலாவுக்கு, முன்னாள் கவர்னர் தமிழிசை ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., பெற்ற ஓட்டு சதவீதம் அடிப்படையில், சட்டசபை தொகுதிகளை பங்கீடு செய்யும் பார்முலாவை கடைபிடிக்க வேண்டும் என, கட்சி மேலிடத்தை அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி 20.5 சதவீதம் ஓட்டுகளையும், பா.ஜ., கூட்டணி 18.5 சதவீதம் ஓட்டுகளையும் பெற்றன. அதன் அடிப்படையில், பா.ஜ., கூட்டணி 84 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2:1 என்ற விகிதாச்சார அடிப்படையில், கூட்டணி கட்சிகளுக்கு, தொகுதிகளை பிரித்து கொடுக்கும் பார்முலாவும், அண்ணாமலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி ஆட்சி அமைப்பதை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஏற்கவில்லை. எனவே, கூட்டணி ஆட்சியை அண்ணாமலையும் வலியுறுத்தவில்லை.
லோக்சபா தேர்தல் ஓட்டு சதவீதம் அடிப்படையில், தொகுதிகளை ஒதுக்கினால் போதும், சட்டசபை தேர்தல் முடிவில் கூட்டணி ஆட்சியை அமைத்து விடலாம் என்பது அண்ணாமலை வியூகமாக உள்ளது. தொகுதி பங்கீட்டில், அ.தி.மு.க., சுமூக உடன்பாட்டிற்கு வரவில்லை என்றால், பா.ஜ., தலைமையில் கூட்டணியை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, முன்னாள் கவர்னர் தமிழிசையும் ஆதரவு தெரிவித்துள்ளார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -