ADDED : பிப் 16, 2025 01:16 AM

டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று ஒரு வாரத்திற்கு மேலாகிவிட்டது; ஆனால், இதுவரை யார் முதல்வர் என்பது முடிவாகவில்லை.
ஆம் ஆத்மி கட்சியை, பா.ஜ., தோற்கடித்தாலும், இரண்டு கட்சிகளுக்கும் இடையே உள்ள ஓட்டு வித்தியாசம் மிகவும் குறைவு தான். பா.ஜ.,விற்கு 45.56 சதவீதம்; ஆம் ஆத்மிக்கு 43.57 சதவீதம். இந்நிலையில், 'மீண்டும் கெஜ்ரிவால் தலை எடுக்காமல் இருக்க, மிகவும் வலிமையான, அதிரடியாக செயல்படக்கூடியவர் தான் முதல்வர் பதவியில் அமர வேண்டும். மேலும், அவர் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் போல் இருக்க வேண்டும்' என, கட்சி மேலிடம் விரும்புகிறதாம்.
'நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக வந்தவர்கள் டில்லியில் அதிக அளவில் குடியேறி விட்டனர். இவர்களை ஒடுக்கவும், நாடு கடத்தவும் ஒரு திறமையான, அதே சமயம் கடுமையான முடிவுகளை எடுப்பவராகவும் முதல்வர் இருக்க வேண்டும்' என, பா.ஜ., மூத்த தலைவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
முதல்வர் பதவிக்கு பல பெயர்கள் அடிபடுகின்றன. அவர், ஒரு பெண்ணாக இருக்கலாம்; பட்டியல் இனத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம் அல்லது கெஜ்ரிவாலைத் தோற்கடித்த, பர்வேஷ் சாஹிப் சிங்காக இருக்கலாம் என கூறப்படுகிறது.

