அனுபவம் இல்லாதவர்களை பொறுப்பாளராக நியமிப்பதா?: மாவட்ட பா.ஜ., தலைவர்கள் கொந்தளிப்பு
அனுபவம் இல்லாதவர்களை பொறுப்பாளராக நியமிப்பதா?: மாவட்ட பா.ஜ., தலைவர்கள் கொந்தளிப்பு
ADDED : நவ 10, 2025 12:07 AM

: தமிழக பா.ஜ., மாவட்டத் தலைவர்களை கலந்தாலோசிக்காமல், அவர்கள் மாவட்டத்தில், அனுபவம் இல்லாதவர்களையும், அவர்களுக்கு எதிரானவர்களையும், மாவட்ட பொறுப்பாளர்களாக நியமித்திருப்பது, அவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை பொதுத் தேர்தல், இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ளது. அதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக, தமிழக பா.ஜ.,வில் சமீபத்தில், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், ஒரு பொறுப்பாளர், ஒரு அமைப்பாளர், ஒரு இணை அமைப்பாளர் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் நியமனம் தொடர்பாக, மாவட்டத் தலைவர்களுடன், கட்சி தலைமை கலந்தாலோசிக்கவில்லை. இதனால், பெரும்பாலான தொகுதிகளில், மாவட்டத் தலைவர், தொகுதி பொறுப்பாளர் தனித்தனியே செயல்படுகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள், யார் பேச்சை கேட்பது என தெரியாமல் தவிக்கின்றனர்.
அவல நிலை இது குறித்து, மாவட்டத் தலைவர்கள் சிலர் கூறியதாவது:
கட்சியில் முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டு, நிர்வாகிகளால் மாவட்டத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு உரிய மரியாதையை, கட்சி மாநிலத் தலைமை வழங்கவில்லை.
கூட்டம் நடத்த, செலவு செய்ய மட்டும் மாவட்டத் தலைவர்களை தேடுகின்றனர்; மற்ற பணிகளில் கண்டு கொள்வதில்லை.
சட்டசபை தேர்தலுக்கு தயாராக வேண்டிய சூழலில், மாவட்டத் தலைவர்களை கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக மாவட்ட பொறுப்பாளர், அமைப்பாளர், இணை அமைப்பாளரை நியமித்து உ ள்ளனர்.
அதிலும் அனுபவம் குறைந்தவர்கள், மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு, அனுபவம் மிக்கவர்கள் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்யும் அவல நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில், கடந்த முறை போட்டியிட்டு தோல்வி அடைந்த நடிகை குஷ்பு, நட்சத்திர பேச்சாளர்.
அவரை அந்த தொகுதியில் அமைப்பாளராக நியமித்துள்ளனர். பொறுப்பாளராக காயத்ரி என்பவரை நியமித்துள்ளனர். அவர் கட்சிக்கு வந்தே மூன்று ஆண்டுகள் தான் ஆகின்றன.
ஆலந்துார் தொகுதியில் பொறுப்பாளராக நாராயணன் திருப்பதி, அமைப்பாளராக மீனாட்சி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தொகுதியில் மாவட்டத் தலைவர் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டில்லி மேலிடம் இதேபோல், 16 தொகுதிகளில், மாவட்டத் தலைவர்கள் இணை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் தொகுதியில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடுவார். அங்கு அனுபவம் இல்லாத மகுடபதி என்பவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து, மாநிலத் தலைவரிடம் கேட்டால், 'கட்சியின் அமைப்பு பொதுச்செயலர் கேசவவிநாயகன் தான் நியமனம் செய்துள்ளார்' என்று கூறுகிறார்.
கேசவ விநாயகனிடம் முறையிட்டால், 'டில்லி மேலிடத்தில் பேசுங்கள்' என்கிறார். என்ன செய்வது என புரியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

