பொதுக்குழு வாயிலாக கூட்டணிக்கு கதவடைப்பு: விஜய் முடிவால் த.வெ.க., நிர்வாகிகள் 'அப்செட்'
பொதுக்குழு வாயிலாக கூட்டணிக்கு கதவடைப்பு: விஜய் முடிவால் த.வெ.க., நிர்வாகிகள் 'அப்செட்'
ADDED : நவ 09, 2025 01:09 AM

சமீபத்தில் நடந்த த.வெ.க., பொதுக்குழு வாயிலாக, அக்கட்சியின் தலைவர் விஜய் கூட்டணிக்கு கதவடைப்பு செய்ததால், கட்சியினர் கடும் 'அப்செட்' ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.
கரூர் சம்பவத்துக்குப் பின், ஒரு மாத காலத்துக்கு த.வெ.க., செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டது.
வழக்குகளால் நிலை குலைந்து போன நிர்வாகிகள், அடுத்து என்ன செய்வது என புரியாமல் தவித்தனர். 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான விசாரணையை, சி.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் மாற்றி உத்தரவிட்ட பின் தான், த.வெ.க., தொண்டர்களும், நிர்வாகிகளும் நிம்மதி அடைந்தனர்.
நடந்த சம்பவத்திற்கு, த.வெ.க., தலைவர் விஜய் கூட்டத்துக்கு தாமதமாக வந்ததே காரணம் என, போலீஸ் மற்றும் ஆளும் கட்சி தரப்பில் குற்றம்சாட்டப்படும் நிலையில், 'தி.மு.க.,வின் திட்டமிட்ட சதியே காரணம்' என, த.வெ.க., தரப்பில் கூறி வந்தனர்.
அதற்கேற்ப, கரூர் சம்பவத்தில் இரங்கல் வீடியோ வெளியிட்ட த.வெ.க., தலைவர் விஜய், 'என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; என் கட்சித் தொண்டர்களை பழிவாங்காதீர்கள்' என, முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார்.
ஆணித்தரமாக இதனால், ஏற்கனவே தி.மு.க., - த.வெ.க., இடையே எரிந்து கொண்டிருந்த எதிர்ப்பு கூடுதலானது. இதையடுத்து, வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற கோபம் த.வெ.க.,வினரிடம் காணப்படுகிறது.
'தி.மு.க., கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றால், த.வெ.க., தனித்து நிற்பதால், அது நடந்து விடாது' என, கட்சியின் ஒவ்வொரு தொண்டரும் நிர்வாகியும் சொல்லத் துவங்கினர்.
தனித்து நிற்பதால், தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகள் பிரிந்து, மீண்டும் தி.மு.க.,வே வெற்றி பெறும் என்பதை, அக்கட்சியினர் ஆணித்தரமாக நம்புகின்றனர்.
இதனால், கடந்த 5ல் கூட்டப்பட்ட கட்சி பொதுக்குழு கூட்டத்தில், 'கூட்டணி தொடர்பாக ஏற்கனவே விஜய் அறிவித்த முடிவில் இருந்து, அவர் எப்படியும் பின்வாங்குவார்; சில சமரசங்களுக்கு உட்படப் போவதாக அறிவிப்பார்' என, அவரது கட்சியினர் எதிர்பார்த்தனர்.
ஆனால் வழக்கம்போல, 'தி.மு.க., - த.வெ.க., இடையே தான் போட்டி' என்றும், 'நானே முதல்வர் வேட்பாளர்' என்றும் பொதுக்குழுவில் விஜய் அறிவித்து விட்டதால், ஒட்டுமொத்த த.வெ.க.,வினரும் அதிர்ச்சியில் உள்ளதாக த.வெ.க., வட்டாரங்கள் கூறுகின்றன.
அக்கட்சி வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:
கட்சி துவங்கியபோது, தி.மு.க., மீது இருந்த வெறுப்பு, கரூர் சம்பவத்துக்குப் பின் விஜய்க்கு அதிகமாகி உள்ளது. சட்டசபை தேர்தலில் எந்த சமரசத்துக்கும் சென்று, தி.மு.க.,வை வீழ்த்தியாக வேண்டும் என்ற மனநிலையில் தான் இருந்தார்.
கள நிலவரம் கரூர் சம்பவத்தால் ஏற்பட்ட கொந்தளிப்புகளே அதற்கு காரணம். அதை மையமாக வைத்து தான், 'கட்சியின் பொதுக்குழுவை கூட்டி விவாதித்து, நல்ல முடிவெடுக்க வேண்டும்' என நினைத்தார். அதற்கேற்ப, கடந்த 5ல் பொதுக்குழு கூட்டப்பட்டது.
ஆனால், அதற்கு முன் விஜயை சந்தித்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர், வழக்கம் போல விஜய் மனதை மாற்றி விட்டனர். அதனால், 'கூட்டணி என்றாலும், முதல்வர் வேட்பாளர் விஜய் தான் என்று, பொதுக்குழுவில் அறிவிப்போம்' என, உசுப்பி விட்டுள்ளனர்.
அவர்களுடைய கருத்துகளை ஏற்ற விஜய், பொதுக்குழுவில் அதற்கேற்ப பேசினார்; தீர்மானங்களும் தி.மு.க.,வுக்கும், அரசுக்கும் எதிராகவுமே இருந்தன. கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனாவும், தி.மு.க., மீதான வன்மத்தையே வெளிப்படுத்தினார்.
இதை கட்சியினர் வெகுவாக ரசித்தாலும், 'கள நிலவரம் அறியாமல், தனித்து போட்டி என்பதுபோல தீர்மானம் நிறைவேற்றியது, அ.தி.மு.க., கூட்டணிக்கு கதவடைக்கும் விஷயம்' என கொந்தளித்தனர்.
'வலுக்கட்டாயமாக கூட்டணி கதவுகளை ஏன் அடைக்க வேண்டும்?' என, கேட்டு அங்கலாய்க்கும் கட்சியினர், 'இதே நிலை தொடர்ந்தால், த.வெ.க., வெற்றியடைய வாய்ப்பில்லை' என்ற முடிவுக்கும் வந்து விட்டனர்.
தனித்து போட்டியிடும்பட்சத்தில், தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகள் பிரிந்து, அக்கட்சிக்கு சாதகமாக அமையும் என்ற அடிப்படையான விஷயத்தைக்கூட யாரும் புரிந்து கொள்ளவில்லை.
வெற்றி உறுதி த.வெ.க.,வை மையமாக வைத்து அரசியல் செய்வதும், அக்கட்சி சார்பில் 'சீட்' பெற்று, தேர்தலை எதிர்கொள்வதும் ஆபத்தானது என்ற முடிவுக்கு, பெரும்பாலான கட்சியினர் வந்துள்ளனர்.
இதனால், 'சீட்' பெறும் முயற்சியில் இருந்த த.வெ.க., நிர்வாகிகள் பலரும் தங்கள் முடிவில் இருந்து பின்வாங்கி உள்ளனர்.
வெற்றி உறுதி என்ற நிலைப்பாட்டில் இல்லாத த.வெ.க., சார்பில் தேர்தல் களத்துக்கு செல்வது உசிதமல்ல என முடிவெடுத்து, கட்சியில் 'சீட்' பெறும் முனைப்பில் காய் நகர்த்தி வந்த அனைவரும் திடீரென அமைதியாகி விட்டனர்.
இந்த விரக்தி மனநிலை, கட்சியின் அடிமட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை வியாபித்திருக்கிறது.
ஏற்கனவே, அனைத்து அரசியல் நிகழ்வுகளையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் தி.மு.க., தலைமை, தற்போது த.வெ.க.,வின் இந்த நிச்சயமற்ற சூழலையும், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் முனைப்பில் இருக்கிறது.
இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -

