வேட்பாளர் தேர்வில் அமித் ஷா: பா.ஜ., நிர்வாகிகள் கலக்கம்
வேட்பாளர் தேர்வில் அமித் ஷா: பா.ஜ., நிர்வாகிகள் கலக்கம்
ADDED : நவ 09, 2025 12:58 AM

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில், பா.ஜ., வேட்பாளர்களை அமித் ஷா தேர்வு செய்ய உள்ளார்.
பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு, 5 முதல் 6 தொகுதிகளிலும், பா.ஜ., கூட்டணிக்கு, 10 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும் என, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் எதிர்பார்த்தனர். ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
தமிழக சட்டசபை தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்பது அமித் ஷா விருப்பம். தமிழக பா.ஜ.,வில் சில மூத்த தலைவர்கள், டில்லி மேலிட தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களிடம் தொடர்பில் உள்ளனர். இதை வைத்து, தங்களுக்கும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் தேர்தலுக்கு தேர்தல் 'சீட்' வாங்கி விடுகின்றனர். ஆனால், வெற்றி பெறுவதில்லை.
இம்முறை அந்த நடைமுறையை உடைத்து, தகுதியானவர்களையே வேட்பாளராக்க வேண்டும் என்ற முடிவுக்கு அமித் ஷா வந்துள்ளார். அதுவும் தன் நேரடி பார்வையில் தேர்வு செய்யவும் முடிவெடுத்துள்ளார்.
இதற்காக, மத்திய உளவுத்துறை அதிகாரிகளை முடுக்கி விட்டுள்ளார். அவர்கள், தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு சாதகமான தொகுதிகள் எவை; யாரை வேட்பாளராக நிறுத்தினால், கட்சி வெற்றி பெறும் என்ற தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
அவர்கள் அளிக்கும் அறிக்கையை வைத்து, தமிழக சட்டசபைக்கான பா.ஜ., வேட்பாளர்களை அமித் ஷா அறிவிக்க உள்ளார். இந்த தகவல், தமிழக பா.ஜ., முக்கிய தலைவர்களுக்கு தெரிய வந்ததால், மேலிட தலைவர்களின் சிபாரிசில், 'சீட்' வாங்கும் எண்ணத்தில் இருந்தவர்களுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

