வாக்குறுதியை நிறைவேற்றாத ஸ்டாலின்: காங்கிரஸ் எம்.எல்.ஏ., பழனி நாடார் கதறல்
வாக்குறுதியை நிறைவேற்றாத ஸ்டாலின்: காங்கிரஸ் எம்.எல்.ஏ., பழனி நாடார் கதறல்
ADDED : நவ 09, 2025 12:56 AM

தென்காசி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பழனி நாடார், தி.மு.க., ஆட்சியை விமர்சித்து கதறி அழுதது, கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரசில் தற்போது 17 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அவர்களின் தொகுதிகளில், மக்களின் மனநிலை எப்படி உள்ளது என, தி.மு.க., ஆதரவு நிறுவனம், உளவுத்துறை, தனியார் நிறுவனம் என, மூன்று சர்வே, சில மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்டன.
அவை அளித்த அறிக்கை வழியே, காங்கிரசின் 12 எம்.எல்.ஏ.,க்கள் மீது, அவர்களின் தொகுதி மக்கள், கடும் அதிருப்தியில் இருப்பது தெரிய வந்தது.
வரும் சட்டசபை தேர்தலில், மீண்டும் அவர்கள் போட்டியிட்டால், காங்கிரஸ் வெற்றி பெறாது என்றும், அதற்கான காரணங்கள் குறித்தும் சர்வே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த அறிக்கை விபரம், காங்., தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்கள் தற்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு தெரிய வந்துள்ளன.
இப்பட்டியலில், தென்காசி தொகுதி எம்.எல்.ஏ., பழனி நாடார் இடம் பெற்றுள்ளார். எனவே, தனக்கு மீண்டும் 'சீட்' கிடைக்குமா என, பழனி நாடாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் அளித்த பேட்டி, கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேட்டி விபரம்:
கடந்த 2021 தேர்தலில், தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். ஓட்டு கேட்க சென்றபோது, 'இரட்டைகுளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றி தருவோம்' என, தென்காசியில் முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அதனால் வெற்றி பெற்றேன்.
இது தொடர்பாக முதல்வரிடம் ஐந்து முறை, அமைச்சர் துரைமுருகனிடம் 15 முறை, தங்கம் தென்னரசுவிடம் மூன்று முறை, துணை முதல்வரிடம் இரண்டு முறை என, தொடர்ந்து வரிசையாக மனுக்களை வழங்கி இருக்கிறோம். ஆனால், அந்த திட்டம் நிறைவேறவில்லை.
இதனால், 'கூட்டு சேர்ந்து எங்களை ஏமாற்றி விட்டீர்களே' என, தொகுதி மக்களும், விவசாயிகளும் என்னை திட்டுகின்றனர். ஓட்டு கேட்டு செல்லும்போது, எதிர்ப்புகள் வரும். அந்த அளவிற்கு மோசமான சூழ்நிலை உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆட்சி முடிய உள்ள நிலையில், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,வே தேர்தல் வாக்குறுதியை, முதல்வர் நிறைவேற்றவில்லை என கூறியிருப்பது, கூட்டணியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது
- நமது நிருபர் - .

