பன்னீரை வம்புக்கு இழுக்கும் வைகோ ஞாபக மறதியா; அபாண்ட புகாரா?
பன்னீரை வம்புக்கு இழுக்கும் வைகோ ஞாபக மறதியா; அபாண்ட புகாரா?
ADDED : நவ 09, 2025 12:48 AM

சென்னை: கடந்த, 2011 சட்டசபை தேர்தலின்போது, அ.தி.மு.க., அணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு சமமாக ம.தி.மு.க.,வுக்கு தொகுதிகளை ஒதுக்கியதால், வைகோ சேரவில்லை என்பதும், அவர் தற்போது பன்னீர்செல்வம் தொடர்பாக கூறியது தவறான தகவல் என்பதும் வெளிச்சமாகியுள்ளது.
சென்னையில் நடந்த ம.தி.மு.க., நிர்வாக குழு கூட்டத்தில், அக்கட்சி பொதுச்செயலர் வைகோ பேசியதாவது:
கடந்த 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வில் இருந்து கூட்டணி பேச்சு நடத்த பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயகுமார் வந்தனர். என்னிடம் பேச்சு நடத்திய பின், 12 தொகுதிகள் தருவதாக கூறினர்.
'ஏற்க முடியாது; ஜெயலலிதாவிடம் பேசி விட்டு பதிலை கூறவும்' என, பன்னீர்செல்வத்திடம் கூறினேன். 'நான் கூறியதை மாற்றி, வைகோ கூட்டணிக்கு வர தயாராக இல்லை' என, ஜெயலலிதாவிடம் பன்னீர்செல்வம் கூறி விட்டார்.
பன்னீர்செல்வத்தால், அ.தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., இடம் பெறவில்லை. கூட்டணி விவகாரத்தில் பன்னீர்செல்வம் அன்று, ம.தி.மு.க.,வுக்கு துரோகம் இழைத்தார். அதற்கான பலனை தற்போது அனுபவிக்கிறார்.
இவ்வாறு வைகோ பேசினார்.
உண்மைக்கு புறம்பானது அப்போது என்ன நடந்தது என்பது குறித்து விபரமாக பேசி வருகிறார் 'துக்ளக்' இதழின் தலைமை நிருபர் ரமேஷ். 'பன்னீர்செல்வம் குறித்து வைகோ பேசியது உண்மைக்கு புறம்பானது' என்றும் அவர் தெரிவிக்கிறார்.
இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:
பன்னீர்செல்வம், 2011 தேர்தலின்போது, அநீதி இழைத்தது போன்று வைகோ பேசுவது துளியும் நியாயமற்றது. அ.தி.மு.க., - தே.மு.தி.க., இடையே அமைந்த கூட்டணியில் முக்கிய பங்கு வகித்தவர், 'துக்ளக்' இதழ் ஆசிரியர் சோ.
வைகோவை எப்படியாவது கூட்டணியில் சேர்த்து விட வேண்டும் என்று பன்னீர்செல்வமும், செங்கோட்டையனும் இறுதி வரை முயன்றனர். அதற்கு அவர்கள், சோ உதவியையும் நாடினர்.
விஜயகாந்த் தரப்பில் பேசி, எத்தனை, 'சீட்' என்பதில் இறுதி செய்ய, சோ கருவியாக இருந்தார். வைகோ விவகாரத்தில், சோ தலையிடவில்லை. அதை ஜெயலலிதா பார்த்துக் கொண்டார். இறுதியாக, 12 தொகுதிகள் என்று இறுதியானது.
அதை ஏற்காத வைகோ, '18 தொகுதிகள் என்றால், அடுத்த கட்டமாக பேசலாம்; இல்லை என்றால், நான் இந்த அணியில் இருக்க விரும்பவில்லை என்று பொதுச்செயலர் ஜெயலலிதாவிடம் தெரிவித்து விடுங்கள்' என்று பன்னீர்செல்வம், செங்கோட்டையனிடம் கூறி விட்டார்.
இந்த தகவலை, அவர்கள் ஜெயலலிதாவிடம் தெரிவித்தனர். 'அப்படியானால் விட்டு விடுவோம்' என்றார் ஜெயலலிதா.
பன்னீர்செல்வமும் செங்கோட்டையனும் சோவை சந்தித்து, 'வைகோ, 18 தொகுதிகள் கேட்கிறார்; ஜெயலலிதா, 12 தொகுதிகள் என்று சொல்கிறார். வைகோ, இத்தனை நாள் நம்மோடு கூட்டணியில் இருந்திருக்கிறார். அவரும் கூட்டணியில் இருந்தால் நன்றாக இருக்கும். நீங்கள் தான் அம்மாவிடம் பேச வேண்டும்' என்றனர்.
'காம்ப்ளக்ஸ்' அதற்கு சோ, 'துக்ளக் இதழின் தலைமை நிருபர் ரமேஷ், வைகோவுக்கு நெருக்கமானவர். அவர் வாயிலாக வைகோவுக்கு இந்த செய்தியை சொல்லுவோம்' என்றார்.
நான் சொல்வது, 200 சதவீதம் இல்லை, 300 சதவீதம் இல்லை, கடவுள் பொதுவாக சொல்கிற உண்மை. நான், வைகோ உதவியாளர் பாலன் வாயிலாக, 'வைகோவிடம் மிக அவசரமாக பேச வேண்டும்' என்றேன்.
அன்று, ம.தி.மு.க., அலுவலகம் தாயகத்தில் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. நான் மீண்டும் வலியுறுத்தி சொன்னதால், வைகோ என்னுடன் தொலைபேசியில் வந்தார்.
வைகோவுக்கு ஏற்பட்ட, 'காம்ப்ளக்ஸ்' என்னவென்றால், அ.தி.மு.க., அணியில் விஜயகாந்துக்கு, 30க்கும் மேற்பட்ட இடங்கள், அடுத்து, மார்க்சிஸ்ட் கட்சிக்கு, 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
மார்க்சிஸ்டுக்கு சமமாக தனக்கு தொகுதிகளை ஒதுக்குவதா; அவர்களை விட கூடுதல் இடங்கள் வேண்டாமா என்று, 18 தொகுதிகளை கேட்டார்.
'வைகோவின் பிரச்னை, மார்க்சிஸ்டை விட, அதிக இடம் அவ்வளவு தானே' என்று நினைத்த சோ, ஜெயலலிதாவிடம் வாதாடி, இரு தொகுதிகளை பெற முடியும் என்ற நம்பிக்கையில், ஜெயலலிதாவை கேட்காமலேயே, பன்னீர்செல்வம், செங்கோட்டையனுடன் கலந்து பேசிவிட்டு, என் வழியாக அந்த தகவலை வைகோவிடம் கொண்டு சென்றார்.
அதற்கு வைகோ, 'நிச்சயமாக முடியாது, 18 தொகுதிகளுக்கு குறைவாக நான் வாங்கி கொள்ள முடியாது. நேற்றைக்கு வந்தவர்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் என்று விஜயகாந்தை சொன்னார்.
'எங்கள் கட்சி, எத்தனை ஆண்டுகளாக அரசியல் பயணத்தில் இருக்கிறது. நான் அந்த அம்மையாருடன், கடந்த ஐந்து ஆண்டுகளாக உறுதுணையாக இருக்கிறேன்.
'இப்போது, எங்களுக்கு இடங்களை குறைப்பதா, நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம். இனி, அது குறித்து பேச வேண்டாம்' என்று சொல்லிவிட்டு, தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.
இதுதான் அன்றைக்கு நடந்தது. பன்னீர்செல்வம் தகவலை மறைத்தார் , இப்போது அனுபவிக் கிறார் என்று கூறுவது சரியானது அல்ல; உண்மைக்கு புறம்பானது. பன்னீர்செல்வமும், 'ம.தி.மு.க., தங்கள் கூட்டணியில் இருக்க வேண்டும்' என்று தான் விரும்பினார்.
வைகோ திட்டமிட்டு, பன்னீர்செல்வம் மீது அபாண்டமாக புகார் சொல்கிறாரா அல்லது ஞாபக மறதியால் நடக்காததை இட்டுக் கட்டி பேசுகிறாரா என தெரியவில்லை. எப்படி இருந்தாலும், அவர் சொல்வது முழுக்க முழுக்க பொய்.
இவ்வாறு அவர் கூறினார்.

