ஐ.ஐ.டி.,யில் அரசு பள்ளி மாணவர்களா? தி.மு.க., அரசின் பொய்: அன்புமணி புகார்
ஐ.ஐ.டி.,யில் அரசு பள்ளி மாணவர்களா? தி.மு.க., அரசின் பொய்: அன்புமணி புகார்
UPDATED : ஆக 30, 2025 10:43 AM
ADDED : ஆக 30, 2025 03:52 AM

சென்னை: 'சென்னை ஐ.ஐ.டி., யில், 28 அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்ததாக, தி.மு.க., அரசு பொய் பரப்புகிறது' என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக அரசின், 'அனைவருக்கும் ஐ.ஐ.டி.,' திட்டத்தின் கீழ், அரசு பள்ளி மாணவர்கள் 28 பேர், சென்னை ஐ.ஐ.டி.,யில் சேர்ந்திருப்பதாக, அமைச்சர் மகேஷ் அறிவித்துள்ளார்.இரு கட்டமாக நடக்கும், ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு வாயிலாகவே, ஐ.ஐ.டி.,யில் சேர முடியும். இந்த முறையில் சேர்ந்தால் தான், ஐ.ஐ.டி., மாணவர்களாக கருதப்படுவர்.
அமைச்சர் குறிப்பிட்ட, 28 மாணவர்களில் 25 பேர், சென்னை ஐ.ஐ.டி., தனிப்பட்ட முறையில் நடத்தும், பி.எஸ்., டேட்டா சயின்ஸ் படிப்பிலும், மூன்று பேர் பி.எஸ்., எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் படிப்பிலும் சேர்ந்துள்ளனர். இதற்கு நுழைவுத்தேர்வு எழுத, 11ம் வகுப்பு தேர்ச்சியே போதுமானது. அதில், 17 முதல் 81 வயது வரை சேர முடியும். இணைய வழியிலான இந்த படிப்புகளில், தற்போது 36,000 பேர் படிக்கின்றனர்.
மேலும், பி.எஸ்., டேட்டா சயின்ஸ், பி.எஸ்., எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் படிப்புகள், தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் நடத்தப்படுபவை. அந்த கல்வி கொள்கையை கடுமையாக எதிர்க்கும் தி.மு.க., இப்போது அதே கொள்கையில் நடத்தும் படிப்பில் மாணவர்களை திணிக்கிறது. இது தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. பொய்களை பரப்பும் தி.மு.க., அரசுக்கு, தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.