'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளுக்கு குறி; தி.மு.க.,வில் உரிமைக்குரல்; காங்.,கில் 'கலகக்குரல்'
'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளுக்கு குறி; தி.மு.க.,வில் உரிமைக்குரல்; காங்.,கில் 'கலகக்குரல்'
UPDATED : ஆக 30, 2025 09:50 AM
ADDED : ஆக 30, 2025 04:06 AM

'காங்கிரசின், தற்போதைய எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளில், வரும் தேர்தலில் தி.மு.க., போட்டியிட வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினிடம், தி.மு.க., நிர்வாகிகள் உரிமைக்குரல் எழுப்பி உள்ளனர்.
இதையடுத்து, 'தொகுதிகளை மாற்றினால், கூட்டணியை மாற்றுவோம்' என, தமிழக காங்கிரசில் கலகக்குரல் ஒலிக்க துவங்கி உள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், 25 தொகுதிகளில், காங்கிரஸ் போட்டியிட்டு, 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வென்ற காங்., -- எம்.எல்.ஏ., திருமகன் ஈ.வெ.ரா., திடீரென மறைந்ததால், நடந்த இடைத்தேர்தலில், அவரது தந்தை இளங்கோவன் வெற்றி பெற்றார். பின்னர், அவரும் உடல்நலக் குறைவால் மறைந்தார்.
![]() |
தி.மு.க., சர்வே
இதையடுத்து, நடந்த இரண்டாவது இடைத்தேர்தலில், அத்தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்காமல், தி.மு.க., போட்டியிட்டு வெற்றி பெற்றது. இதனால், காங்கிரசிடம் தற்போது, 17 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அவர்களில் 12 பேருக்கு, அவரவர் தொகுதிகளில் செல்வாக்கு இல்லை என, தி.மு.க., நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது.
எனவே, 'அவர்களுக்கு மீண்டும் அதே தொகுதியை தர வாய்ப்பு இல்லை' என, காங்., முன்னாள் தலைவர் சோனியாவிடம், முதல்வர் ஸ்டாலின் தரப்பில் இருந்து, சில மாதங்களுக்கு முன் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில், மீண்டும் அதே தொகுதிகளை, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வாயிலாக பெற்று விடலாம் என, சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கருதுகின்றனர்.
சோளிங்கர், நாங்குநேரி, திருவாடானை, காரைக்குடி, கிள்ளியூர், குளச்சல், விளவங்கோடு, ஊட்டி, தென்காசி போன்ற தொகுதிகளில் இரண்டு, மூன்று, நான்கு முறை என காங்கிரஸ் தொடர்ந்து போட்டியிட்டு வந்துள்ளது.
ரகசிய திட்டம்
'இந்த தொகுதிகளை மீண்டும் மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்கினால், அங்கு தி.மு.க., வளராது. எனவே, அந்த தொகுதிகளில், இந்த முறை தி.மு.க., போட்டியிட வேண்டும்' என, முதல்வர் உடனான சந்திப்பின்போது, அம்மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதை அறிந்த காங்கிரஸ் கட்சியினர், கடும் கொந்தளிப்பில் இருக்கின்றனர். எனவே, 'வரும் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை, தி.மு.க., தர மறுத்தால், மாற்று கூட்டணி குறித்து பரிசீலிக்க வேண்டும்' என, கட்சி தலைமையிடம் வலியுறுத்தி உள்ளனர்.
கூட்டணிக்கு வந்தால், துணை முதல்வர் பதவி, அமைச்சரவையில் பங்கு தருவதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார்.
எனவே, 'த.வெ.க., வுடன் கூட்டணி அமைப்பதற்கு, காங்கிரஸ் கட்சி தயாராக வேண்டும்' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சிலர், ரகசிய திட்டம் வகுத்துள்ளனர்.
மேலும், தி.மு.க.,வின் திட்டத்தை தொடர்ந்து, தங்களின் கலகக்குரலை, டில்லி மேலிடத்திற்கு கேட்கும் வகையில், ஒலிக்க துவங்கி உள்ளனர்.
இந்த விவகாரம், தி.மு.க., - -காங்கிரஸ் கூட்டணியில், சலசலப்பை உருவாக்கி உள்ளது.
- நமது நிருபர்