ADDED : ஜன 21, 2024 03:03 AM

காவல் துறை சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., சில தினங்களுக்கு முன் ஒரு சுற்றறிக்கை விடுத்தார். அதில், 'நில பிரச்னை, பணபரிமாற்றம் போன்ற சிவில் தகராறுகளில், காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து செய்யக்கூடாது' என்று தெரிவித்திருந்தார்.
காவல் துறையில் உள்ள நேர்மையற்ற சிலர், பணத்துக்கு ஆசைப்பட்டு தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அப்பாவிகளை கொடுமைக்கு ஆளாக்குவதை தடுக்கும் நல்ல நோக்கத்துடன், அந்த சுற்றறிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
எப்போதுமே நல்ல நோக்கத்துக்காக அமல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டமும், கூடவே சில தவறான பக்க விளைவுகளை உடன் இழுத்து வந்து விடுவது இயல்பு.
குற்ற நிகழ்வுகளுக்கு அடிப்படை காரணமே, மண், பொன் (பணம்), பெண் என்பது, அனைவரும் அறிந்த உண்மை. எனவே, ஏ.டி.ஜி.பி.,யின் சுற்றறிக்கையை சரியான புரிதலுடன் அணுகினால் தான், காவல் துறையின் சேவை மக்களுக்கு உரிய முறையில் கிடைக்கும்.
நேர்மையும், திறமையும், அனுபவமும் மிக்க அதிகாரிகள், தங்களின் அதிகார எல்லையை உணர்ந்து செயல்பட தெரிந்தவர்கள்.
தடுப்பு நடவடிக்கை
சமூக அக்கறை உடைய அவர்கள், காவல் நிலையத்தில் பெறும் புகாரை முறைப்படி பதிவு செய்து, நடுநிலையாக விசாரித்து, தங்களின் அதிகார வரம்பையும், சட்டவிதிகளையும் மீறாமல்...
மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர் இருவரும் மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் வகையில், அந்த பகுதியில் வசிக்கும் நடுநிலையான முக்கிய நபர்களின் உதவியோடு, சுமுகமான தீர்வுக்கு வழிவகுப்பர்.
இதனால், ஒரு பகைமை அழிக்கப்பட்டு பல குற்ற சம்பவங்கள் தவிர்க்கப்படும். இது, கட்டப்பஞ்சாயத்து அல்ல. குற்ற நடைமுறை சட்டம் பிரிவு 149 அனுமதிக்கும், குற்ற தடுப்பு நடவடிக்கை.
ஆனால், நழுவல் பேர்வழிகளாக உள்ள சில அதிகாரிகளுக்கு, ஏ.டி.ஜி.பி.,யின் அறிவிப்பு, மிகப்பெரிய வரப்பிரசாதம். நிலம், வீடு, பணம், கணவன் - மனைவி தகராறு என்று வந்தாலே, மனுவை வாங்க மறுத்து விடுவர். 'கோர்ட்டுக்கு போ!' என்று துரத்தி விடுவர்.
ஏ.டி.ஜி.பி.,யின் அறிவுறுத்தல், அவர்கள் தங்களின் அலுவல் பொறுப்பை தட்டிக் கழிக்க கிடைத்த நல்ல வாய்ப்பாக அமைந்து விடும்.
காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க செல்லும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும், பணபலமும், செல்வாக்கும் மிக்கவர்கள் அல்ல. அவர்களுக்கு சவாலாக இருப்பவர்கள் எல்லாரும், சாமானியர்களோ, அப்பாவிகளோ அல்ல.
அதேபோல, காவல் நிலையத்துக்கு வரும் நிலம், பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட புகார்களும், நீதிமன்றத்துக்கு போகும் அளவுக்கு பெரிய மற்றும் சிக்கலான பிரச்னைகளும் அல்ல.
எத்தனையோ அற்ப விஷயங்களை, அவர்களுக்குள் பேசி முடிக்க வாய்ப்பு அளித்து, நடுநிலையாக ஒருவர் இருந்து தீர்த்து வைக்க முயற்சித்தால், சுமுகமாக முடிந்து விடும். இன்னும் சில பிரச்னைகள் வருவாய் துறை அதிகாரிகளின் உதவியோடு, ஓரிரு தினங்களில் முடிந்து விடக்கூடிய பிரச்னைகள்.
அவற்றை செய்து முடிக்கும் போது, சம்பந்தப்பட்ட இருதரப்பினருக்கும் நிம்மதி ஏற்பட்டு, உதவி செய்த அதிகாரிகள் மீது மதிப்பும், அவர்கள் சார்ந்த துறை மீது நம்பிக்கையும் பிறக்கும். இந்த விவகாரங்களில், சம்பந்தப்பட்டவர்களுக்கு தேவை, நடுநிலையாக பேச ஒரு நல்ல நபர்.
முந்தைய காலங்களில் தலைமை காவலர்கள் அளவில் விசாரித்து, பைசல் செய்யப்பட்ட புகார்கள், தற்போது காவல் நிலையங்களில் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன.
சிக்கல்கள்
இப்படிப்பட்ட சூழலில், பிரச்னைகளை கையிலெடுத்து லாபமடையும் சில சமூக விரோதிகள், பிரபல ரவுடிகளாகவும், தாதாக்களாகவும் உருவாகி விடுகின்றனர். அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டு தொடர் கொலைகளும் நிகழ்கின்றன.
உதாரணமாக, தன் ஒரே சொத்தான சிறிய வீட்டின் ஒரு பகுதியை, குறைந்த வாடகைக்கு விட்டு, அதில் கிடைக்கும் தொகையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார், ஒரு வயதான மூதாட்டி.
அவர் வீட்டில் திட்டமிட்டு வாடகைக்கு புகுந்ததுடன், வேண்டுமென்றே வாடகையையும் கொடுக்காமல், மூதாட்டின் இயலாமையை பயன்படுத்தி வருகிறார் பணபலம் படைத்த வியாபாரி.
இதுகுறித்து, அந்த மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், 'இது சிவில் தகராறு, கோர்ட்டுக்கு போ' என்று காவல் நிலையத்தில் சொன்னால், அந்த மூதாட்டி காவல் நிலைய வாசலிலேயே உயிரை விட்டு விடவும் வாய்ப்பு உண்டு.
ஆனால், நேர்மையான போலீஸ் அதிகாரி, பேசும் விதத்தில் பேசினால், எவ்வித அத்துமீறலும் இல்லாமல் மூதாட்டிக்கு நியாயம் கிடைக்கச் செய்ய முடியும்.
சாதாரணமாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடனும், உறவினர்களுடனும் பழகும் போது கடைப்பிடிக்க வேண்டிய சகிப்புத்தன்மை மற்றும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாத காரணத்தால் தான், சிறு சிறு பூசல்கள் எழுகின்றன.
உடனடியாக, யாராவது தலையிட்டு அவர்களுக்கு அதை உணர்த்தினால், அந்த பூசல் பகையாக வளர்ந்து கைகலப்பில் முடியும் நிலை தவிர்க்கப்படும். இதையே, காவல் துறையிடம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காவல் துறையின் பணி, சட்டத்தை அமல்படுத்தி, மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது மட்டுமல்ல; சமுதாயத்தில் ஒரு ஒழுங்கை நிலை நாட்டுவதும் அவர்கள் பணியே. பூட்டு தன் பெயருக்கேற்ப பூட்டிய படியே தான் இருப்பேன் என்றால் பயனில்லை; பயனுள்ள பூட்டு திறக்கவும் வேண்டும்.
சமூக அக்கறை
காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் ஒவ்வொரு புகார் மனுவும், உரிய முறையில் விசாரிக்கப்பட்டு முடித்து வைக்கப்படாவிட்டால், அந்த விவகாரங்கள் ஒரு குற்ற நிகழ்வில் சென்று முடியவும் வாய்ப்பு இருக்கிறது.
இதனை புரிந்து கொள்ளாமல், தங்கள் கடமையில் துாங்குகிற காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள், புகழை இழப்பது நிச்சயம்.
சமீபத்தில், பெற்றோரின் சம்மதமின்றி பட்டியலின வாலிபரை மணந்த பெண்ணுக்கு, இருக்கும் ஆபத்தை பல முன் நிகழ்வுகளில் இருந்தும் அறிந்து விழிப்படையாத ஒரு அதிகாரி, பெண்ணை பெற்றோருடனேயே அனுப்பி வைத்ததன் விளைவு, அந்த பெண் பெற்றோராலேயே கொலை செய்யப்பட்டார்.
குற்றங்களை தடுப்பதற்காக, மனிதாபிமானத்துடனும், சமூக அக்கறையுடனும், காவல் துறையினர் செயல்பட நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளன.
எனவே, சமூக அக்கறையுள்ள காவல்துறை அதிகாரிகள், ஏ.டி.ஜி.பி.,யின் அறிவுறுத்தல்களை தங்களின் பொறுப்பை தட்டிக்கழிக்க கிடைத்த வாய்ப்பாக கருதக்கூடாது. அறிவுறுத்தலின் அடிப்படை காரணத்தை புரிந்து, தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.
அதேசமயம், உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள், இதுபோன்ற ஒரு உத்தரவை பிறப்பித்து விட்டால், தங்களின் மேற்பார்வையிடும் பொறுப்பு சற்று குறையும் என்று எண்ணாமல், தொழில் நுட்பம் முன்னேற்றம் அடைந்துள்ள இந்த சூழலில், தங்களின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளின், ஒவ்வொரு செயல்பாட்டையும் கண்காணித்து, தவறு நடக்காமல் தவிர்க்க வேண்டும்.

