கூவம் நதியை மீட்டெடுக்கும் முயற்சி தோல்வி!: கழிவுநீரில் கரைந்து போன ரூ.1,479 கோடி
கூவம் நதியை மீட்டெடுக்கும் முயற்சி தோல்வி!: கழிவுநீரில் கரைந்து போன ரூ.1,479 கோடி
UPDATED : ஜூலை 20, 2024 06:18 AM
ADDED : ஜூலை 20, 2024 01:28 AM

சென்னையின் பிரதான ஆறுகளில் ஒன்று கூவம். திருவள்ளூர் மாவட்டம், கேசவரம் என்ற கிராமத்தில் கல்லாற்றின் கிளையாக கூவம் ஆறு உற்பத்தியாகிறது. சென்னை நேப்பியார் மேம்பாலம் அருகே கடலில் கலக்கிறது.
மொத்தம் 72 கி.மீ., பாயும் கூவம் ஆறு, சென்னை மாநகரில் மட்டும் 20 கி.மீ., ஓடுகிறது. ஒரு காலத்தில், குடிநீராகவும், பாசனத்துக்கும் பயன்பட்டது.
ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் போன்ற நகர்மயமாதலால் தொழிற்சாலைகள் அதிகரித்தன. அவற்றின் கழிவுகள் கலக்கப்பட்டு, குப்பை போன்ற திடக்கழிவுகள் கொட்டப்பட்டு, கூவம் ஆறு மாசடைந்தது.
இதை சீரமைத்து புதுப்பொலிவூட்ட, அரசு பலமுறை திட்டமிட்டது. தமிழகத்தின் பல முதல்வர்கள், கூவம் ஆற்றை சீரமைப்பதே லட்சியம் எனும் அளவிற்கு பேசி வந்தனர். ஆனாலும், தற்போது வரை அதை மீட்டெடுக்க முடியவில்லை.
கடந்த 2015 - 16ம் நிதியாண்டில் 1,479 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியில், கூவம் ஆற்றை துார்வாருதல், அகலப்படுத்துதல், கரைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்கு, 129.22 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.
ஆற்றங்கரையோரம் வசித்த மக்களை மறுகுடியமர்த்துவதற்காக 290.13 கோடி ரூபாய்; கழிவுநீர் கொட்டும் குழாய்களை அடைப்பதற்காக 129.83 கோடி ரூபாய்; சுற்றுச்சுவர், வேலி அமைப்பதற்காக 122.99 கோடி ரூபாய்; மரம் நடுதல் மற்றும் அழகு படுத்துதல் பணிக்காக 20.75 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.
அதன்படி, 1,479 கோடி ரூபாயில் 800 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டும், கூவம் ஆறு சென்னையின் பிரமாண்டமான கழிவுநீர் வாய்க்காலாகவே தொடர்கிறது.
கூவம் ஆற்றில் கழிவுநீர் விடுவதை இடைமறித்து, சுத்திகரிக்கும் பணிகள், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக, நேப்பியார் பூங்கா, சேத்துப்பட்டு ஸ்பெர்ட்டாங் சாலை, நுங்கம்பாக்கம் சாலை, மேத்தா நகர், அண்ணா நகர்,லேங்ஸ் கார்டன் சாலை, தெற்கு கூவம் சாலை, அமைந்தகரை என்.எஸ்.கே.நகர் உள்ளிட்ட 15 இடங்களில், 186.19 கோடி ரூபாய் மதிப்பில் கழிவுநீரை இடமறித்து சுத்திகரிக்கும் பணிகள் நடந்தன.
தற்போது, கழிவுநீரை இடமறித்து சுத்திகரிக்கும் பணிக்கு, 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனினும், மாசுபட்டிருக்கும் கூவம் ஆற்றில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி உள்ளிட்ட சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. இதனால், சென்னைவாசிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
கூவம், அடையாறு ஆகிய ஆறுகளை சீரமைப்பதற்காக, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.
அவற்றுடன், பொதுப்பணி, நீர்வளம், சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக மேம்பாட்டு இயக்கம்,சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்,சென்னை நதிகள் சீரமைப்புஅறகட்டளை ஆகிய அரசு துறைகளும், கூவம் ஆறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
எனினும், தொடர்ச்சியாக நடக்கும் ஆக்கிரமிப்பு மற்றும் அதிகாரிகள் அலட்சியத்தால், கூவம் ஆற்றின் இயல்புநிலையை மீட்பது, எட்டாக்கனியாகவே உள்ளது.
தாரைவார்ப்பு@@
சென்னை நகர கட்டமைப்பிற்காக, கிராமங்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் கூவம் கரையோரத்தில் தங்குவதற்கு, ஆட்சியாளர்களால் அனுமதிக்கப்பட்டனர்.
காலப்போக்கில், சென்னையை நோக்கி படையெடுப்போரின் வாழ்விடமாக கூவம் கரை மாறிப்போனது. கூவம் மறுசீரமைப்பு பணியில், 13,200 வீடுகள், கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
அதேநேரம், பெரிய நிறுவனங்களில் கட்டுமானம் மற்றும் கல்வி நிறுவனங்களில் கட்டுமானம் ஆகியவற்றை அகற்றுவதற்கு பதிலாக, இந்நிலம் அந்நிறுவனங்களுக்கு நீதிமன்ற அறிவுறுத்தல்படி தாரைவார்க்கப்பட்டு உள்ளது.
கடுமையான சட்டம் வேண்டும்
சென்னையில், பெரிய நிறுவனங்கள் முதல் குடியிருப்புகள் வரை, குடிநீர் வாரியத்திற்கு வரி செலுத்த தயங்கி, மழைநீர் வடிகால்களில் நேரடியாக கழிவுநீர் இணைப்பை விடுகின்றனர். இந்த கழிவுநீர் இணைப்பை, கடுமையான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி, முழுமையாக துண்டிக்க வேண்டும். விதிமீறலில் ஈடுபட்ட அனைவரின் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளில் கழிவுநீர், குப்பை கொட்டுவோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும். இல்லை என்றால், கூவத்தை சுத்தப்படுத்துவது நீரில் போடப்பட்ட உப்பாகவே இருக்கும்.
- எல்.இளங்கோ,
பேராசிரியர், நீர்வள பொறியியல், ஐ.ஐ.டி., சென்னை
ஒருங்கிணைந்த பணி அவசியம்!
கூவம் ஆற்றை சுத்தப்படுத்த, அரசு பல பணிகள் மேற்கொண்டாலும், நிரந்தர தீர்வு ஏற்படவில்லை. இரண்டு வழிமுறைகளை கடைப்பிடித்தால் கூவம் ஆற்றை, அதன் இயல்பில் மீட்க முடியும். ஒன்று கழிவுநீர் விடுவதை முற்றிலும் தடுக்க வேண்டும்; மற்றொன்று கூவம் ஆற்றை அகலப்படுத்தி, ஆழப்படுத்த வேண்டும். அதுபோன்று பல்வேறு இடங்களில் நீரை சேமிப்பதன் வாயிலாக நிலத்தடி நீர் கிடைப்பதுடன், மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பையும் தடுக்க முடியும். கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, மீண்டும் ஆற்றில் விட பல தன்னார்வ நிறுவனங்கள் தயாராக இருந்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு உள்ளது.
- எஸ்.ஜனகராஜன்,
தலைவர், தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனம்
கூவம் ஆற்றின் நீளம்: 72 கி.மீ.,
சென்னையில்: 20 கி.மீ.,
துார்வார ஒதுக்கிய நிதி: ரூ.1,479 கோடி
சுத்திகரிப்பு நிலையம்: 15
சுத்தமானது எப்போது: 2015 வெள்ளத்தில் (அடுத்த 5 மாதங்களில் நாசமானது)
-
அகற்றப்பட்ட குப்பை கழிவு: 1.69 கோடி கிலோ
அகற்றப்பட்ட கட்டட கழிவு: 7.65 கோடி கிலோ
ஆண்டுக்கு சராசரியாக அகற்றம்: 2,885 கோடி கிலோ
10 மிதவை தடுப்பான்களால் துாய்மை பணி
------------
கூவத்தின் பரப்பு தெரியவில்லை
கூவம் ஆற்றின் நீளம், எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு அகலம் போன்ற தரவுகள் அரசிடம் இல்லை. தகவலுக்கு ஒரு முழுமையான சர்வே எடுப்பது அவசியம். கூவம் ஆற்றில் கழிவுகள் எந்தளவுக்கு, எத்தனை மீட்டருக்கு இருக்கின்றன என்பதை கண்டறியவும் சர்வே எடுக்க வேண்டும்.
அதற்கு மாற்றாக, கூவம் ஆற்றில் தடுப்புச்சுவர், வேலி அமைத்தல், புல் செடிகள், மரம் வளர்த்தல் போன்றவை, 'பவுடர்' பூசும் கதையாக தான் இருக்கும். குறிப்பாக, கூவம் ஆற்றில் நேரடியாக கழிவுநீர் விடுவதை தடுத்தால் மட்டுமே, கூவத்தில் நன்னீர் ஓடும்.
- நமது நிருபர் -