தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/சுயசரிதை எழுதியது ஏன்?: மனம் திறந்தார் சோனியா

சுயசரிதை எழுதியது ஏன்?: மனம் திறந்தார் சோனியா

சுயசரிதை எழுதியது ஏன்?: மனம் திறந்தார் சோனியா

1


ADDED : நவ 17, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

1

ADDED : நவ 17, 2026 05:41 AM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ''பல ஆண்டுகளாக என் குடும்பத்தினர் பற்றி பல உண்மைக்கு புறம்பான மற்றும் மனதை புண்படுத்தும் கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. என் தரப்பு நியாயத்தையும், வாழ்க்கை பயணத்தையும் மக்களிடையே எடுத்துரைக்கும் வாய்ப்பாக கருதியே, சுயசரிதை எழுதினேன்,'' என, காங்., - பார்லி., குழு தலைவர் சோனியா, 79, முதன்முறையாக மனம் திறந்தார்.

காங்., - பார்லி., குழு தலைவரும், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவின் மனைவியுமான சோனியா, தன் வாழ்க்கை பயணம் குறித்து, 'பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆப் லவ்' என்ற பெயரில் சுயசரிதை எழுதி உள்ளார். இந்த புத்தகத்தை, 'ஹார்ப்பர் காலின்ஸ் இந்தியா' நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தயக்கம்


இந்த புத்தகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா, டில்லியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்று நடந்தது. இதில், சோனியா பேசியதாவது: என் வாழ்க்கை பயணத்தை பற்றி எழுத வேண்டும் என, என் நண்பர்கள் பலர் தொடர்ந்து கூறி வந்தனர். என் உள்ளுணர்வுகளை வெளியே சொல்வதில் எனக்கு எப்போதும் தயக்கம் உண்டு.

ஆனால், சுயசரிதை எழுதும்படி, மகன் ராகுல், மகள் பிரியங்கா, நெருங்கிய தோழி மஞ்சுளிகா ஆகியோர் தொடர்ந்து என்னை வற்புறுத்தினர்; ஊக்கப்படுத்தினர். அதனால், சுயசரிதை எழுத நானும் சம்மதித்தேன். என் குடும்பம், என் மாமியார் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா, ராகுல், பிரியங்கா ஆகியோரை பற்றி பொது வெளியில் பல விஷயங்கள் பேசப்படுகின்றன.

அவற்றில் பெரும்பாலானவை உண்மைக்கு புறம்பானவை. மனதை புண்படுத்தும் விதமாகவும் பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன. எனவே, என் கதையை சொல்வதற்கு இதுவே சரியான வழி என, நினைத்தேன். இந்த புத்தகத்தில், 'பிலாங்கிங்' என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் வருகிறது.

முயற்சி


என்னை பொறுத்தவரை, இந்த மண்ணிற்கும், கலாசாரத்திற்கும் சொந்தமானவளாக மாற எவ்வளவு கடினமாக முயற்சி செய்தேன் என்பதை இது குறிக்கிறது. நீங்கள் ஒரு வெளியாளாக இருக்கும் போது, யாரோ உங்களை எப்போதும் கண்காணிப்பது போன்றும், எங்கே தவறு செய்து விடுவோமோ அல்லது தவறான வார்த்தையை பேசி விடுவோமோ என்ற அழுத்தமும் இருக்கும்.

இது, எனக்கு மட்டுமல்ல. நாட்டில் உள்ள பல பெண்களின் வாழ்க்கையிலும் இது தான் நடக்கிறது. அவர்கள் திருமணமாகி ஒரு புதிய வீட்டிற்குள் நுழையும் போது, மாமியார் வீட்டாரின் பழக்கவழக்கங்கள் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கலாம். எனினும், அவர்களின் வழிமுறைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றி, அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பெண்கள் நடக்க வேண்டியுள்ளது.

நான் முற்றிலும் மாறுபட்ட சமூக மற்றும் கலாசார சூழலிலிருந்து வந்ததால், எனக்கு இது சற்று கடினமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்திய பெண்களுக்கும் புகுந்த வீட்டில் ஏற்றுக்கொள்ளப்படுவது என்பது அதே அளவுக்கு கடினமானதாகவே உள்ளது. அதனால் தான் என் புத்தகத்திற்கு, 'பிலாங்கிங்' என, தலைப்பிட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.

Image 1646318


முதல் வரிசையில் முதல்வர் விஜய்


புத்தக வெளியீட்டு விழாவில், சோனியா, அவரது மகனும், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், அவரது மகளும், லோக்சபா எம்.பி.,யுமான பிரியங்கா, கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, த.வெ.க., தலைவரும், தமிழக முதல்வருமான விஜய், கர்நாடக முதல்வர் சிவகுமார், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கும் விழாவில் பங்கேற்றார். தவிர, 'இண்டி' கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.
விழாவில், முதல் வரிசையில் முதல்வர் விஜய்க்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. கார்கே, ராகுலுக்கு அடுத்தபடியாக அவர் அமர்ந்திருந்தார். அதே சமயம், காங்., ஆளும் மாநில முதல்வர்கள் சிவகுமார், ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோருக்கு இரண்டாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us