ஆட்சியை கவிழ்க்க திமுக - அதிமுக வியூகம்; உளவுத்துறை கண்காணிப்பில் எம்.எல்.ஏ.,க்கள்
ஆட்சியை கவிழ்க்க திமுக - அதிமுக வியூகம்; உளவுத்துறை கண்காணிப்பில் எம்.எல்.ஏ.,க்கள்
ADDED : நவ 17, 2026 05:48 AM

சென்னை: ஆட்சியை கவிழ்க்க, தி.மு.க., - அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள் உளவுத்துறை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
த.வெ.க., அரசு பதவியேற்றதும், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, த.வெ.க., அரசு வெற்றி பெற்றது. சட்ட விதிகளின்படி, ஆறு மாதங்களுக்கு பிறகே, மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியும்.
தற்போது, த.வெ.க., ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் முடிந்து விட்டதால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, தி.மு.க., - அ.தி.மு.க., தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர், டிசம்பர் இறுதிக்குள் நடத்தப்படும்போது, தீர்மானம் கொண்டு வரப்படும் என தெரிகிறது.
சட்டசபையில், சபாநாயகருடன் சேர்த்து, த.வெ.க.,விற்கு 109 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள, காங்கிரசுக்கு ஐந்து, வி.சி.க., மற்றும் முஸ்லிம் லீக் கட்சிக்கு, தலா இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். எனவே, பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான, 118 எம்எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஐந்து இடங்கள் காலியாக உள்ளதால், தி.மு.க., - அ.தி.மு.க., கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை, மிக எளிதாக தோற்கடிக்க முடியும்.
அதே நேரத்தில், த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள், கட்சி மாறி ஓட்டளித்தால், ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படும். இதனால், த.வெ.க., தலைவரான, முதல்வர் விஜய், சமீபத்தில், கட்சி எம்.எல்.ஏ.,க்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். அவர்களுக்கு தீபாவளி கவனிப்பும் நடந்தது.
எனினும், த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள் பலர், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்களுக்கு தேவையான சகல வசதிகளையும், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் செய்து தருகின்றனர். எனவே,உளவுத்துறை வாயிலாக, த.வெ.க., -எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
இந்நிலையில், 'விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளிப்படையாக பேசியுள்ளார். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு, 'த.வெ.க., எம்.எல்.ஏ.,க்கள் 30 பேர் அதிருப்தியில் உள்ளனர்,' என கூறியுள்ளார்.
இதற்கிடையே, இ.கம்யூ., - மா. கம்யூ., கட்சிகளின் ஆதரவை தக்க வைப்பதற்கு, த.வெ.க., தலைமை முயற்சி மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கம்யூ., தலைவர்கள் உடன்படாததால், டில்லி சென்றுள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அங்கு கம்யூ., மூத்த தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.
காங்., மேலிட தலைவர்கள் வாயிலாகவும், கம்யூ., தலைவர்களின் ஆதரவை கோர திட்டமிட்டு, காங்., அகில இந்திய பொதுச்செயலர் வேணுகோபாலை, ஆதவ் சந்தித்து பேசியுள்ளார். இதற்கிடையே, டில்லியில் நேற்று, பா.ஜ., தேசிய நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் பேசிய தகவலும் வெளியாகியுள்ளது.
குதிரை பேர முயற்சியில் ஸ்டாலின் ஈடுபடுகிறார்
முன்னாள் அமைச்சர் நேரு இல்ல திருமணத்தில் பேசிய தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தன்னை அறியாமல், திரைமறைவில் செய்யும் வேலைகள் பற்றிய ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்திருகிறார். ஏற்கனவே, 'இந்த ஆட்சி மூன்று மாதம் கூட நீடிக்காது' என்று பித்து பிடித்தது போல் பேசிக்கொண்டு இருந்தார். அதிகாரம் பறிபோன பதற்றத்தில், த.வெ.க., ஆட்சியை கவிழ்க்க, பல முயற்சிகளை செய்து பார்த்தார்.
த.வெ.க., மீது, குதிரை பேரம் என்ற பொய் புகாரை கூறிய அவர், தன் ஓய்வு காலத்தில், குதிரை பேர முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்பதைத்தான், அவரது பேச்சு காட்டுகிறது. 'விரைவில் தி.மு.க., ஆட்சி உதயமாகிறது' என்றால், அவர் நடத்தும் குதிரை பேர முயற்சிகள் ஒவ்வொரு கட்டமாக முன்னேறி கொண்டிருக்கிறது என்று சொல்கிறாரா? குதிரை பேரம் நடத்துவது யார் என்பது மக்களுக்கு இப்போது தெரிந்திருக்கும்.
- அருண்ராஜ்,
தமிழக அமைச்சர், த.வெ.க.,
