நீலகிரியில் கொல்லப்படும் புலிகள்: மக்களிடம் விழிப்புணர்வு அவசியம்
நீலகிரியில் கொல்லப்படும் புலிகள்: மக்களிடம் விழிப்புணர்வு அவசியம்
UPDATED : டிச 30, 2024 05:04 AM
ADDED : டிச 30, 2024 12:54 AM

கூடலுார்: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் மசினகுடி, கூடலுார், நீலகிரி வனக்கோட்டம் புலிகளின் முக்கிய வாழ்விடமாக உள்ளன. கடந்த ஆண்டு, ஆக., - செப்., மாதங்களில், ஆறு புலிக்குட்டிகள் உட்பட 10 புலிகள் உயிரிழந்தன.
அதில், இரண்டு புலிகள், விஷம் வைத்து கொல்லப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரிந்தது. தொடர்புடைய குற்றவாளிகளை வனத்துறையினர் கைது செய்தனர். இறந்த புலிக்குட்டிகளின் தாய் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இந்நிலையில், நடப்பாண்டு, இதுவரை ஆறு புலிகள் உயிரிழந்துள்ளன. அதில், கூடலுார் வனக்கோட்டம் பிதர்காடு பகுதியில், இரு புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சுமுக உறவு
கடந்த மாதம் செலுக்காடியில் சுருக்கு கம்பியில் சிக்கி ஆண் புலி இறந்ததும் வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஆறு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'இயற்கையாக புலிகள் உயிரிழப்பது தவிர்க்க முடியாது. ஆனால், மனிதர்களால் வைக்கப்படும் விஷம் மற்றும் சுருக்கு கம்பியில் சிக்கி புலிகள் உயிரிழந்தது அதிர்ச்சியாக உள்ளது.
'இதை தடுக்க பொதுமக்கள், வனத்துறையினர் இடையே சுமுக உறவு அவசியம்.
'காடுகள் பாதுகாப்பில் புலிகளின் பங்கு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கிராம குழுக்கள் அமைத்து, அவர்கள் உதவியுடன் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.
முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா கூறுகையில், ''முதுமலை புலிகள் காப்பக வேட்டை தடுப்பு முகாம்களில், 24 மணி நேரமும் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். முதுமலையின் எல்லை பகுதி என்பது, கர்நாடக பந்திப்பூர் புலிகள் காப்பகம், கேரளா முத்தங்கா வன சரணாலயம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்களின் எல்லைகளை கொண்டு அமைந்துள்ளது.
அச்சமின்றி உலா
''கூடலுார் உள்ளிட்ட முதுமலை வன எல்லைகளில், வேட்டை தடுப்பு முகாம்கள் அமைத்து கண்காணித்து வருகிறோம். இதனால், புலிகள் மட்டுமின்றி அனைத்து வனவிலங்குகளும் அச்சமின்றி உலா வருகின்றன.
''புலிகளை விஷம் வைத்து கொல்பவர்கள் மீது சட்டபடியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களிடமும் இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்,'' என்றார்.