திருப்பூருக்கு வடமாநிலத்தவர் போர்வையில் வங்கதேசத்தினர் ஊடுருவல்
திருப்பூருக்கு வடமாநிலத்தவர் போர்வையில் வங்கதேசத்தினர் ஊடுருவல்
UPDATED : ஜன 31, 2025 08:08 AM
ADDED : ஜன 31, 2025 01:30 AM

திருப்பூர்: 'டாலர் சிட்டி'யான திருப்பூரில், வடமாநிலத்தினர் போர்வையில் வங்கதேசத்தினர் ஊடுருவி உள்ளனர். இந்த மாதம் மட்டும், 100 பேர் சிக்கியுள்ளனர். இன்னும் ஏராளமானோர் இருப்பதால் அவர்களையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும்.
தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி உ.பி., பீஹார், ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலத்தவர்களும் வேலை வாய்ப்புக்காக திருப்பூரில் தங்கியுள்ளனர்.
இவர்கள் தவிர நைஜீரியா, வங்கதேசம், நேபாளம் உட்பட வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும், தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். தொழில் விஷயமாக, பல நாட்டவரும் திருப்பூருக்கு வருகின்றனர்.
திருட்டு சம்பவங்கள்
தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால், அதனை தங்களுக்கு பயன்படுத்திக் கொண்டு, கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு புகலிடமாக திருப்பூர் மாறியுள்ளது.
தொழிலாளர்கள் போர்வையில் நடமாடி வரும் குற்றவாளிகள், முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை போலீஸ் கைது செய்து வருகின்றனர். வங்கதேசத்தினர் உள்ளிட்ட வெளிநாட்டினர், வடமாநிலத்தினர் போர்வையில் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து ஊடுருவி வருகின்றனர்.
இதனை தடுக்க போலீஸ் தரப்பில் பலமுறை தொழில்துறையினர் உள்ளிட்டோருடன் இணைந்து வடமாநிலத்தினர் விபரங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், சில மாதங்களில் அப்பணி கிணற்றில் போட்ட கல்லாக மாறி விடுகிறது.
தமிழகத்தல் ஊடுருவல் தொடர்பாக சமீபத்தில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா எச்சரிக்கை ஒன்றை தெரிவித்தார். அதில், அசாம், மேற்கு வங்கம் வழியாக நம் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழையும் வங்கதேசத்தினர் தமிழகம் சென்று ஜவுளி துறையில் பணிபுரிகின்றனர்.
சட்டவிரோதமாக நுழைய முயல்பவர்களில், பத்து சதவீதம் பேர் மட்டுமே சிக்குகின்றனர் என்ற சந்தேகம் உள்ளது. சமீபத்தில் பணியில் இணைந்தவர்களின் பின்னணி குறித்து ஆய்வு செய்யும்படி தெரிவித்தார்.
இதனால், கடந்த ஆறு மாதங்களாகவே திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பயங்கரவாத அமைப்பினர் உடன் தொடர்புடையவர்கள், வங்கதேசத்தினர் ஊடுருவல் குறித்து மீண்டும் தமிழக போலீசார் கண்காணிப்பை பலப்படுத்தினர்.
இதன் காரணமாக, ஊடுருவல் இருக்கக்கூடிய மாநகர, மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
100 பேர் கைது
திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பனியன் நிறுவனம், வடமாநிலத்தினர் தங்கியுள்ள பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் கோவை தீவிரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதனால், பல்லடம், மங்கலம், நல்லுார், காலேஜ் ரோடு, வாவிபாளையம் என, பல பகுதிகளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் முறைகேடாக தங்கியிருந்த வங்கதேசத்தினர், நுாறு பேரை இந்த ஒரு மாதத்தில் மட்டும் போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, இவர்களை திருப்பூர் அழைத்து வரும் ஏஜன்ட்கள் யார், யார் என்பதை விசாரித்து, அவர்களின் நடமாட்டம் குறித்து விசாரிக்கின்றனர். இதுதொடர்பாக, தொழில்துறையினர், வேலைவாய்ப்பு நிறுவனங்களை அழைத்து பல்வேறு விஷயங்களை பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளனர்.
20,000 பேர்
போலீசார் கூறியதாவது:
திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் இவர்களின் ஊடுருவல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் கைது நடவடிக்கை என்பது அவ்வப்போது இருந்து வந்தது. தற்போது கண்காணிப்பு, ஆய்வு போன்றவற்றை தீவிரமாக நடக்கிறது.
இதன் எதிரொலியாக தான், ஒரு மாதத்தில் மட்டும், நுாறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடரும் பட்சத்தில் இன்னும் அதிகப்படியான பேர் கைதாவார்கள். இன்னும், 15,000 முதல் 30,000 பேர் வரை ஊடுருவியிருக்க வாய்ப்புள்ளது என்று சந்தேகப்படுகிறோம்.
குறிப்பாக, கைது செய்யப்படும் வங்கதேசத்தினர் ஆறு முதல், ஒரு ஆண்டு வரை திருப்பூரில் இருந்து வருகின்றனர்.
முறைகேடாக நுழைபவர்கள் எளிதாக, மேற்குவங்கம், அசாம் வழியாக குடியேறி எளிதாக இந்திய ஆவணங்களை போலியாக பெற்று, திருப்பூர் வந்து விடுகின்றனர்.
சிலர், இங்குள்ள ஏஜன்ட்களை பயன்படுத்தி இதற்காக சில ஆயிரங்களை மட்டும் செலவு செய்து ஏதாவது ஒரு இந்திய ஆவணங்களை பெற்று விடுகின்றனர். எனவே, இவர்களின் ஊடுருவலை தடுக்க, அவர்களை கண்டுபிடிக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
வீட்டின் உரிமையாளர், பனியன் நிறுவனத்தினர் வேலைக்கு வரும் நபரிடம் ஆதாரை மட்டும் பெறாமல், மற்ற ஆவணங்கள் இருக்கின்றதா என்பதை கண்டறிய வேண்டும். சந்தேகப்படும் விதமாக இருந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும். பணத்துக்கு ஆசைப்பட்டு சிலர் செய்யும் செயல் நாட்டின் பாதுகாப்புக்கே கேள்விக்குறியாகி விடும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
ஆற்றை கடந்து
வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கம், '24 பர்கானாஸ்' என்ற இடத்தில் உள்ள ஆற்றின் வழியாக உள்ளே நுழைகின்றனர். அங்கு சில வாரங்கள் தங்கி, தங்களை இந்திய பிரஜையாக மாற்றிக் கொள்ள, ஏஜன்டுகளை பிடித்து போலியான ஆவணங்கள் மூலம் ஆதார் கார்டு உள்ளிட்ட ஏதாவது ஒன்றை பெறுகின்றனர்.
அங்கிருந்து கொல்கத்தாவில் இருந்து ரயில் மூலம் சென்னை வருகின்றனர். அங்கிருந்து, திருப்பூர் வந்து, அவர்கள் சொல்லி அனுப்பிய ஏஜன்ட் வாயிலாக பனியன் நிறுவனம் அல்லது வடமாநிலத்தினர் தங்கியுள்ள பகுதிகளில் தஞ்சமடைந்து விடுகின்றனர்.
சிலர் ஆவணங்களை திருப்பூர் வந்து எடுக்கின்றனர். அதற்கு சிலர் துணை போவதால், எளிதாக டாக்டர், பள்ளி தலைமையாசிரியர், நோட்டரி வக்கீலிடம் ஆவணங்களை தயார் செய்து விண்ணப்பித்து ஆதார் கார்டு, காஸ் இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு போன்றவற்றை பெறுகின்றனர். இதற்காக, 5,000 முதல், 15,000 வரை செலவு செய்து நாட்டின் பிரஜையாக மாறி விடுகின்றனர்.
கடந்த நான்கு மாதம் முன் அனுப்பர்பாளையத்தில் வங்கதேசத்தினர் சிலர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் விசாரித்த போது, பல்லடத்தைச் சேர்ந்த புரோக்கர் மாரிமுத்து என்பவர், சில ஆயிரங்களை பெற்று வடமாநிலத்தினர், வங்கதேசத்தினருக்கு அரசு டாக்டரிடம் கையெழுத்து வாங்கி விண்ணப்பித்து திருப்பூர் மாநகராட்சியில் உள்ள மையத்தில் இருந்து ஆதார் பெற்றுக் கொடுத்தது தெரிந்தது.
இதுதொடர்பாக, அந்த நபரை அனுப்பர்பாளையம், தெற்கு போலீசார் கைது செய்தனர். கையெழுத்து போட்ட டாக்டரை அழைத்து விசாரித்தனர்.
போலி ஆதார்
இதற்கு முன், 2018ல், இதேபோன்று நல்லுாரில், பத்து வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டபோது பீஹாரைச் சேர்ந்த முன்னாள் ஆதார் மைய ஊழியர் ஒருவர் திருப்பூரில் தங்கி ஏராளமான போலி ஆதார் கார்டுகளை பெற்று கொடுத்தது தெரிந்தது.
இதற்கு உடந்தையாக இருந்த அவிநாசியைச் சேர்ந்த, மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கருவிழிக் கருவி உள்ளிட்ட பலவற்றை பறிமுதல் செய்தனர்.
எனவே, ஆதார் மையம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பை மேற்கொள்வதுடன், வடமாநிலத்தினர் ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, இணைக்கப்பட்ட ஆவணங்கள் சரியாக உள்ளதா என்பதை அனைத்தையும் கண்காணிக்க வேண்டும்.
போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டை காரணமாக, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வடமாநிலத்தினர் போர்வையில் தங்கியுள்ள வங்கதேசத்தினர் போலீசாரிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க வேறு இடங்களுக்கு வெளியேறுகின்றனர். அவர்களை பிடிக்கும் வகையில், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் போன்ற போக்குவரத்து உள்ள இடங்களில் போலீசார் கண்காணிக்கின்றனர்