'அமைச்சர்கள் கவனமாக இருங்கள்; மத்திய அரசு கண்காணிக்கிறது': முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
'அமைச்சர்கள் கவனமாக இருங்கள்; மத்திய அரசு கண்காணிக்கிறது': முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
ADDED : ஆக 15, 2024 05:31 AM

சென்னை கோட்டையில், நேற்று முன்தினம் தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. தமிழகத்துக்கு தொழில் துவங்க, அன்னிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக, அமெரிக்காவுக்கு 27ல் முதல்வர் செல்கிறார். அது தொடர்பான நிறைய விஷயங்கள், அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளன.
அமைச்சர்களிடம் முதல்வர் பேசியது குறித்து, கோட்டை வட்டாரம் கூறியதாவது:
தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தான், அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்கிறேன். பலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனால், இம்முறை கூடுதல் அளவுக்கு தொழில் முதலீடுகள் கட்டாயம் தமிழகத்துக்கு ஈர்க்கப்படும். எதிர்க்கட்சியினர் சொல்வது போல, தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கான மோசமான சூழல் இல்லை என்பதை, அமெரிக்காவில் இருக்கும் தொழில் அதிபர்கள் உணர்ந்துள்ளனர்.
இம்முறை கூடுதல் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதும், அதை வைத்து தமிழகத்தில் நாம் அரசியல் செய்வோம். அதுவரை, இதுகுறித்து அமைச்சர்கள் யாரும் அவசரப்பட்டு, எதையும் மக்கள் மத்தியில் பேச வேண்டாம்; அமைதியாகவே இருங்கள்.
நான் இங்கு இல்லை என்றதும், அமைச்சர்கள் தங்கள் செயல்பாடுகளை தாறுமாறாக அமைத்துக் கொள்ளக் கூடாது. இங்கு இல்லை என்றாலும், ஒவ்வொரு நிமிடமும் தமிழகத்தில் தான் என்னுடைய எண்ணமும், கண்களும் இருக்கும். உங்கள் ஒவ்வொருவரின் செயல்பாடுகளையும் அங்கிருந்தபடியே கவனித்துக் கொண்டிருப்பேன். எல்லா தகவல்களும் நொடிக்கு நொடி எனக்கு வந்து சேர்வது போல, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இங்கு எந்தத் தவறு நடந்தாலும், அது எனக்கு உடனடியாக கொண்டு வரப்பட்டு விடும். அதனால், எல்லாரும் எச்சரிக்கையோடும், கவனமாகவும் செயல்பட வேண்டும். எனக்கு வந்திருக்கும் உளவுத் தகவல் அடிப்படையில் சில விஷயங்களை வெளிப்படையாகவே சொல்கிறேன்.
ஏற்கனவே மத்திய உளவு அமைப்புகள் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி, நம் எல்லாரையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. நான் இங்கு இல்லாத சூழலிலும், கண்காணிப்புகள் தொடரும். அமைச்சர்கள் ஏடாகூடமாக ஏதாவது செய்து, மத்திய அரசு அதன் வாயிலாக நடவடிக்கை எடுத்தால், அது ஒட்டுமொத்த தி.மு.க., ஆட்சிக்கும், கட்சிக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.
எனவே ஒவ்வொருவரும் நுாறு மடங்கு கவனமாக செயல்பட வேண்டும். செயல்பாட்டில் எந்த சந்தேகம் என்றாலும், எந்த நேரம் என்றாலும் என்னை உரியவர்கள் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். சில மூத்த அமைச்சர்கள், தனிப்பட்ட முறையில் என்னை அணுகி, துணை முதல்வர் அறிவிப்பு குறித்துப் பேசினர். அவர்களுடைய எண்ணமும், பேரன்பும் மதிக்கத்தக்கது. ஆனால், அமைச்சர் உதயநிதி உடனடியாக அப்பொறுப்பை ஏற்க விருப்பம் தெரிவிக்கவில்லை.
கூடுதல் அனுபவம் பெற்ற பின், பொறுப்பை ஏற்பதாக சொல்லி விட்டதால், சில காலம் பொறுத்து எதையும் செய்து கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
- நமது நிருபர் -

