கோவை தொகுதியை வைத்து கோடிகளில் நடக்கிறது 'பெட்டிங்': ரிசல்ட் தேதி நெருங்குவதால் எகிறுகிறது பரபரப்பு!
கோவை தொகுதியை வைத்து கோடிகளில் நடக்கிறது 'பெட்டிங்': ரிசல்ட் தேதி நெருங்குவதால் எகிறுகிறது பரபரப்பு!
ADDED : மே 30, 2024 05:47 AM

கோவை தொகுதியில், யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து, பல கோடி ரூபாய் மதிப்பில் 'பெட்டிங்' நடப்பது தெரியவந்துள்ளது.
ஏழு கட்ட லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் முதற்கட்டமாக கடந்த ஏப்.,29 அன்றே ஓட்டுப்பதிவு முடிந்துவிட்டது. இதனால், ஜூன் 4 வரை தேர்தல் முடிவை அறிய தமிழக மக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
39 தொகுதிகளில், கோவை தொகுதியே அதிக எதிர்பார்ப்புக்குரிய தொகுதியாக மாறியுள்ளது. பா.ஜ., தலைவர் அண்ணாமலை இங்கு போட்டியிட்டிருப்பதே காரணம். அவருக்காக, பிரதமர் மோடி, தேர்தலுக்கு முன் ஒரே மாதத்துக்குள் மூன்று முறை கோவைக்கு வந்து சென்றது, இந்த எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்தது.
'இண்டியா' கூட்டணி சார்பிலும், காங்., மூத்த தலைவர் ராகுல், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், கோவையில் பிரசாரம் மேற்கொண்டனர்.
பலமான ஓட்டு வங்கியைக் கொண்ட அ.தி.மு.க., தனியாக வேட்பாளரை நிறுத்தியது; கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமியும் இங்கு வந்து, தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார். இதனால், கடுமையான மும்முனைப் போட்டி நிலவியது.
திராவிடக்கட்சிகள் போராட்டம்
2021ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளில், முழுமையாக தோற்று விட்ட தி.மு.க., இந்த முறை கோவையில் வெல்வதை, கவுரவப் பிரச்னையாக எடுத்துக் கொண்டது. அதனால், எப்பாடுபட்டாவது கோவை தொகுதியில் வெற்றி பெறுவதற்கு, மிகக் கடுமையான முயற்சிகளை எடுத்தது; ஓட்டு வங்கியைத் தக்க வைக்க, அ.தி.மு.க.,வும் போராடியது.
தமிழகத்தின் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களையும் கிழித்தெடுக்கும் பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கோவை தொகுதியில் நின்றதால், அக்கட்சியினரும் அவரை வெற்றி பெற வைப்பதற்கு, மிகத் தீவிரமாக வேலை பார்த்தனர். அவர் வெற்றி பெற்று மத்திய அமைச்சராகிவிட்டால், கோவைக்குத் தேவையான பல்வேறு திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்றும் பிரசாரம் மேற்கொண்டனர்.
களைகட்டும் பந்தயம்
இதனால் தான், இந்தத் தொகுதியில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை, இப்போது வரை யாராலும் கணிக்க முடியாத நிலை உள்ளது. கோவை தொகுதியில் பா.ஜ., தலைவர் அண்ணாமலை போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்ட நாளில் துவங்கிய பரபரப்பு, நாளுக்கு நாள் அதிகமானது.
இந்த பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் வைத்து, கோவையில் யார் வெற்றி பெறுவார் என்று பந்தயம் கட்டத் துவங்கினர். ஓட்டுப்பதிவு நடக்கும் நாள் வரையிலும், பல தரப்பிலும் 'பெட்டிங்' நடத்துவது அதிகமானது. அரசியல் ஆர்வமுள்ள பலரும், தங்கள் வசதிக்கேற்ப, ஆயிரத்திலிருந்து பல லட்சங்கள் வரை 'பெட்டிங்' கட்டி வைத்துள்ளனர். வசதி படைத்த சிலர், தங்களுடைய வாகனங்கள், இடங்கள் உள்ளிட்ட சொத்துக்களையும் வைத்து, 'பெட்டிங்' கட்டியிருப்பதாக தகவல் பரவியுள்ளது.
ஓட்டு எண்ணிக்கைக்கு ஐந்து நாட்களே இருப்பதால், 'பெட்டிங்' கட்டியவர்கள் அனைவரும் பதற்றத்தில் தவிக்கின்றனர். எத்தனை ஆயிரம் பேருக்கு எத்தனை லட்சம் லாபம், நஷ்டம் என்பது ஜூன் 4 மதியத்துக்குள் தெரிந்துவிடும்!
-நமது சிறப்பு நிருபர்-