பி.ஜி.ஆர்., ஒப்பந்தம் ரத்தை தொடர்ந்து சாதகமாக செயல்படுவோர் மீது நடவடிக்கை
பி.ஜி.ஆர்., ஒப்பந்தம் ரத்தை தொடர்ந்து சாதகமாக செயல்படுவோர் மீது நடவடிக்கை
UPDATED : ஜன 31, 2024 03:14 AM
ADDED : ஜன 30, 2024 10:20 PM

சென்னை: துணைமின் நிலையம் அமைக்கும் பணியை முடிக்காமல் தாமதித்த பி.ஜி.ஆர்., நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மின் வாரியம் ரத்து செய்ததை அடுத்து, மற்ற ஒப்பந்த நிறுவனங்களும் அச்சம் அடைந்துள்ளன.
மேலும், ஒப்பந்த நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுவோர் மீதும் நடவடிக்கை எடுக்க மின் வாரியம் ஆயத்தமாகி வருகிறது.
அனல் மின் நிலையங்கள், துணைமின் நிலையங்கள் மற்றும் மின் வழித்தட கட்டுமான பணிகளை மின் வாரியம், ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக மேற்கொள்கிறது. ஒப்பந்த பணிகளை, மத்திய அரசின் பி.எச்.இ.எல்., மற்றும் தனியார் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
எந்த ஒரு திட்டமும் குறித்த காலத்தில் முடிவடைந்ததில்லை. அதை பொறியாளர்களும் கண்டுகொள்வதில்லை. இதனால், திட்டச்செலவு அதிகரிப்பதுடன், அதற்காக வாங்கப்பட்ட கடனுக்கான வட்டி செலவும் அதிகரிக்கிறது. கடந்த, 2022 - 23ல், கடன்களுக்கான வட்டியாக மட்டும், 13,450 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டை விட, 2,527 கோடி ரூபாய் கூடுதல்.
கோவை மாவட்டம் எடையார்பாளையத்தில், 400 கிலோ வோல்ட் திறனில் துணைமின் நிலையம் அமைக்கும் பணியை பி.ஜி.ஆர்., நிறுவனம், இரு ஆண்டுகளாக முடிக்காத நிலையில், ஒப்பந்தம் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது.
இதேபோல, எந்தெந்த திட்ட பணிகள் தாமதமாகி வருகின்றன என்ற விபரம் சேகரிக்கப்பட்டு, அதற்கு காரணமான நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதுதவிர, ஒப்பந்த நிறுவனங்களின் பணிகள் குறித்த விபரங்களை உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வராத ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.