பீஹார் தேர்தல் தோல்வி: காங்கிரசுக்கு அதிக 'சீட்' கிடையாது!
பீஹார் தேர்தல் தோல்வி: காங்கிரசுக்கு அதிக 'சீட்' கிடையாது!
ADDED : நவ 15, 2025 11:43 PM

புதுடில்லி: பீஹார் சட்டசபை தேர்தலில் மோடி - -நிதிஷ் குமார் கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்று, இண்டி கூட்டணியை பரிதாப நிலைக்கு தள்ளிவிட்டது. இதில், குறிப்பாக, காங்கிரசின் நிலை படுமோசம். புதிதாக போட்டியிட்ட ஓவைசி கட்சிக்கு கூட, 5 தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது. ஆனால், 100 ஆண்டுகளைக் கடந்த காங்கிரசுக்கு வெறும், 6 தொகுதிகளில் தான் வெற்றி. 2020 பீஹார் சட்டசபை தேர்தலில், 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது காங்கிரஸ்.
'ஓட்டுத் திருட்டு, இந்தியாவின் அரசியல் அமைப்பை மாற்றுகிறார் மோடி' என்கிற ராகுலின் தீவிர பிரசாரத்தை, பீஹார் வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 'பீஹாரின் பிரச்னைகளைப் பற்றி பேசாமல், ஓட்டுத் திருட்டைப் பற்றி ராகுல் பேசியது சரியில்லை' என, புலம்புகின்றனர் காங்கிரசார்.
அத்துடன், இன்னொரு விஷயமும் சொல்லப்படுகிறது. 'பீஹார் மக்களின் முக்கிய விழாவான, -சூரியனை வழிபடும் சத் பூஜை குறித்து கிண்டல் செய்துள்ளார் ராகுல். இதுவும் தோல்விக்கு முக்கிய காரணம்' என்கின்றனர். இதனால் தான், தன் வெற்றி விழா உரையின் போது, 'சத் பூஜையை கிண்டல் செய்தவர்கள் இப்போது பலனை அனுபவிக்கின்றனர்' என, பேசியுள்ளார் மோடி.
'பீஹாரின் தோல்வி, இன்னும் ஐந்து மாதங்களில் நடைபெற உள்ள தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா மற்றும் அசாம் சட்டசபை தேர்தல்களில் பிரதிபலிக்கும்' என, வருத்தப்படுகின்றனர் காங்., தலைவர்கள்.
குறிப்பாக, தமிழகத்தில் இந்த முறை அதிக தொகுதிகளை தி.மு.க.,விடமிருந்து வாங்கிவிடலாம் என்கிற திட்டத்தில் இருந்த காங்கிரசுக்கு, பீஹார் பெருத்த அடியாக விழுந்துள்ளது. 'தி.மு.க., அதிக தொகுதிகளை நிச்சயம் தர வாய்ப்பில்லை. நடிகர் விஜய் கட்சி பக்கம் போனாலும், அதிக தொகுதிகள் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்' என, டில்லி காங்கிரசார் கருதுகின்றனர்.
'மேற்கு வங்கத்திலும், காங்கிரசுக்கு இதே நிலைதான். அங்கு மம்தா தனியாக போட்டியிடுவார். காங்கிரசும், இடதுசாரிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவர். பா.ஜ., தனியாக களம் இறங்கும். பீஹார் முடிவுகள் இங்கும் பிரதிபலிக்கும்' என, அஞ்சுகின்றனர் காங்., தலைவர்கள்.

