தேர்தல் கமிஷன் மீதான மரியாதையே போச்சு: முதல்வர் ஸ்டாலின் எரிச்சல்
தேர்தல் கமிஷன் மீதான மரியாதையே போச்சு: முதல்வர் ஸ்டாலின் எரிச்சல்
ADDED : நவ 16, 2025 12:30 AM

சென்னை: 'தேர்தலில் வெற்றி பெறாதோரின் நம்பிக்கையையும் பெறும் அளவுக்கு, தேர்தல் கமிஷன் நியாயமான முறையில் தேர்தல்களை நடத்த முன்வர வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:
பீஹார் சட்டசபை தேர்தல், அனைவருக்கும் பாடங்களை வழங்கி உள்ளது. பெரும் வெற்றிகளை பெற்றுள்ள மூத்த தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமாருக்கு பாராட்டுகள்.
பீஹார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற, அவருக்கு வாழ்த்துகள். ஓயாமல் பரப்புரை மேற்கொண்ட இளந்தலைவர் தேஜஸ்விக்கும் பாராட்டுகள்.
நலத்திட்ட வினியோகம், சமூக மற்றும் கொள்கை கூட்டணிகள், நாம் சொல்ல வேண்டிய அரசியல் ரீதியான செய்தியை, தெளிவாக மக்களிடம் சொல்வது, இறுதி ஓட்டுகள் பதிவாகும் வரை அர்ப்பணிப்புடன் தேர்தல் பணியாற்றுவது என பலவற்றையும், ஒரு தேர்தல் முடிவு பிரதிபலிக்கிறது.
'இண்டி' கூட்டணியில் உள்ள அனுபவமிக்க தலைவர்கள், இத்தகைய செய்தியை உணரவும், இனி எழும் சவால்களை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுக்கவும் ஆற்றல் பெற்றவர்கள்.
அதே வேளையில், இத்தேர்தல் முடிவுகள், தேர்தல் கமிஷன் குளறுபடிகளையும், பொறுப்பற்ற செயல்களையும் இல்லாமல் ஆக்கி விடாது.
தேர்தல் கமிஷன் மீதான மரியாதை, இதுவரை இல்லாத அளவுக்கு கீழிறங்கி உள்ளது. வலுவான, நடுநிலையான தேர்தல் கமிஷனை கோருவது, நம் நாட்டு மக்களின் உரிமை.
தேர்தலில் வெற்றி பெறாதோரின் நம்பிக்கையையும் பெறும் அளவுக்கு, தேர்தல் கமிஷன் நியாயமான முறையில் தேர்தல்களை நடத்திட முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

