காங்கிரசை கலைத்து விடுங்கள்: வம்புக்கு இழுக்கும் அ.தி.மு.க.,
காங்கிரசை கலைத்து விடுங்கள்: வம்புக்கு இழுக்கும் அ.தி.மு.க.,
ADDED : நவ 16, 2025 12:25 AM

- நமது நிருபர் - பீஹார் தேர்தல் முடிவுகளுக்கு பின், '' காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுவது நல்லது,'' என, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச, அதற்கு கடுமையாக பதிலளித்துள்ளார் தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை. ''கடந்த 1996ல் தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில், அ.தி.மு.க., ஜெயலலிதா படுதோல்வி அடைந்தவர் தான். அதனால், அ.தி.மு.க., ஒன்றும் தோற்காத கட்சி அல்ல,'' என பதிலடி கொடுத்துள்ளார். இருவரும் பேசியதன் தொகுப்பு இங்கே:
ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:
பீஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி, வழக்கம் போல இந்த முறையும் அறுதி பெரும்பான்மை பெற்றுள்ளது. விரைவில் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. இனி பீஹாரில் காங்கிரசுக்கு வேலை இல்லை என்றாகி விட்டது. அதனால், காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுவது தான் நல்லது.
நாட்டு மக்களுக்கு இதுவரை எவ்வித நன்மையும் செய்யாததாலேயே, அக்கட்சியை பீஹார் மக்களும் புறக்கணித்துள்ளனர். காந்தி ஆரம்பித்து, நேரு, நேதாஜி போன்றோர் உழைப்பில் உருவான காங்கிரஸ் கட்சி இன்றைக்கு இல்லை. இன்றைக்கு இருக்கும் காங்., நாட்டை காட்டிக் கொடுத்து தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் கட்சியாக உருமாறி உள்ளது.
அரசு பணியில் இருந்து ஓய்வு பெறுவோர் ஒவ்வொருவருக்கும் பாராட்டு விழா கூட்டம் நடத்தப்படுவது இயல்பு. அந்த வகையில், தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு பாராட்டு விழா நடத்தி வருகின்றனர்.
நாட்டில் என்னவெல்லாமோ நடக்கிறது. ஆனால், எதை பற்றியும் கவலைப்படாமல், தேசத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறார். நாட்டைப் பற்றிய கவலை இருந்தால், அவர் ஜாலிக்காக சுற்றுப்பயணம் செல்வாரா?
அவருக்கு மட்டுமல்ல; காங்கிரசில் இருக்கும் எந்த தலைவருக்கும் நாட்டைப் பற்றிய கவலை துளியும் கிடையாது. நாட்டிலேயே வீணாய் போன கட்சி என்றால் அது காங்கிரஸ் தான். அக்கட்சியை தேவையே இல்லாமல் தி.மு.க., துாக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.
பீஹாரில் என்ன மாதிரியான தேர்தல் முடிவுகள் வந்திருக்கிறதோ, அதே மாதிரி தான் தமிழகத்திலும் அமையப் போகிறது; 220க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.
செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி:
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு, அடிப்படை அரசியல் நாகரிகம் தெரியாது. அவரது பேச்சை பழனிசாமி கண்டித்திருக்க வேண்டும். அ.தி.மு.க., துவங்கப்பட்டு 53 ஆண்டுகளாகிறது; எத்தனை தோல்விகளை சந்தித்திருக்கிறது என்பது ராஜேந்திர பாலாஜிக்கு தெரியாது.
ஆனால், காங்கிரஸ் இயக்கம் துவங்கி, 140 ஆண்டுகளாகிறது. அக்கட்சியின் வரலாறும் அவருக்கு தெரியாது. மோடியை 'டாடி' என்றழைக்கக்கூடிய ராஜேந்திர பாலாஜி, காங்கிரஸ் மற்றும் ராகுலை பற்றி பேசுவதற்கு துளியும் தகுதி இல்லாதவர்.
பீஹாரில், மஹாகட்பந்தன் கூட்டணியில் காங்., முதன்மையான கட்சி இல்லை; ராஷ்ட்ரீய ஜனதா தளம் தான் முதன்மையான கட்சி. ஆனால், கடந்த 1996ல், 'தமிழகத்தில் நாங்கள் தான் முதன்மை கட்சி' என அ.தி.மு.க., தம்பட்டம் அடித்தது. அந்த தேர்தலில், அ.தி.மு.க., படுதோல்வி அடைந்தது.
தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி தான் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஒரு நாளும் அடுத்த கட்சிக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கவில்லை. ராகுலின் 'ஜீன்' பற்றி தெரியாத ராஜேந்திர பாலாஜி, வாய்க்கு வந்ததை பேசுகிறார். அதற்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும்; இல்லையென்றால், ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்படும்.
பீஹார் தேர்தலில் காங்கிரசின் ஓட்டு சதவீதம் குறையவில்லை. அதேநேரம், பா.ஜ.,வும் ஒரு சதவீதம் அளவுக்கு கூடுதலாக ஓட்டு பெற்றுள்ளது. காங்., எப்போதும் யானை மாதிரி. அதற்காக, யானையை ஒரு நாளும் மட்டமாக மதிப்பிட்டு விட முடியாது.
பீஹார் வேறு, தமிழகம் வேறு என்பதை வரும் தேர்தலில் காங்., நிரூபிக்கும். முஸ்லிம் சமூகமே தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறது என சொல்வது தவறு.

