ADDED : நவ 14, 2025 11:47 PM

பீஹார் தேர்தலில், 'இண்டி' கூட்டணி சார்பில், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசியும், மக்கள் அதை ஏற்காமல், செயல்படுத்தக்கூடிய வாக்குறுதிகளை அளித்த பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
பீஹார் சட்டசபை தேர்தலில், இம்முறை எப்படியும் வெற்றி பெற்று விட வேண்டும் என முடிவு செய்து, 'இண்டி' கூட்டணி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.
வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஆதரவு அளிப்பர் என தேஜஸ்வி முழுமையாக நம்பினார்.
இதனால், 'வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்; இதற்காக பதவியேற்ற 20 நாட்களுக்குள், சிறப்பு வேலைவாய்ப்பு சட்டம் இயற்றப்படும். மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
'கணவனை இழந்த வயதான தாய்மார்களுக்கு, மாதந்தோறும் 1,500 ரூபாய் ஓய்வூதியம், ஏழை இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் உரிமைத் தொகை, அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
'அரசு துறைகளில் பணியாற்றும் ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணியாளர்கள், நிரந்தரத் தொழிலாளர்களாக பணி அமர்த்தப்படுவர்.
'முடி திருத்துவோர், குயவர், தச்சர் ஆகியோருக்கு, 5 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும்' என அதிரடியாக வாக்குறுதிகளை அள்ளி விட்டார்.
இதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் சற்று கலக்கம் அடைந்தது. எனவே, அந்த கூட்டணி சார்பில், 'இலவச கல்வி வழங்கப்படும். சீதாபுரம் நகரம் உருவாக்கப்படும். ஒரு கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
'பெண் தொழில் முனைவோருக்கு, 2 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படும். இலவச மின்சாரம் 125 யூனிட் வழங்கப்படும். பள்ளி மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்கப்படும்' என, வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
தே.ஜ., கூட்டணி சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் ஓரளவுக்கு நிறை வேற்றக் கூடிய வாய்ப்புள்ளவை.
'வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை' என, 'இண்டி' கூட்டணி அளித்த வாக்குறுதி, தேர்தலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், மக்கள் அதை நம்பவில்லை.
சாத்தியப்படாத வாக்குறுதிகளை அளித்த, 'இண்டி' கூட்டணியை தேர்தலில் புறக்கணித்துள்ளனர். அதற்கு மாறாக, செயல்படுத்தக்கூடிய வாக்குறுதிகளை அளித்த பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
இதே போலத்தான், தமிழகத்தில் கடந்த தேர்தலின் போது, நீட் தேர்வு ரத்து, பூரண மதுவிலக்கு, அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் என செய்ய முடியாத பல வாக்குறுதிகளை அளித்து, தி.மு.க., ஆட்சிக்கு வந்தது ஆனால், கடந்த நான்கரை ஆண்டு காலமாக எதையும் செய்ய முடியாமல் அக்கட்சி தடுமாறி வருகிறது.
இந்நிலையில், 'பீஹார் மக்கள் தே.ஜ., கூட்டணிக்கு அளித்திருக்கும் வெற்றி, தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஒரு பாடமாகும். பீஹார் மக்களே, செயல்படுத்த முடியாத வாக்குறுதிகளை அளித்த கட்சிகளை ஏற்கவில்லை.
எனவே, தமிழக மக்களும், அப்படிப்பட்ட வாக்குறுதிகளை அளித்தால், வரும் தேர்தலில் அதை பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்; இதை அரசியல் கட்சியினர் உணர வேண்டும்' என, பீஹார் தேர்தல் முடிவுகளை மேற்கோள்காட்டி அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசுகின்றனர்.
- நமது நிருபர் -:

