பா.ஜ., வெற்றிக்கு தமிழகத்தில் இருந்து கைகொடுத்த தி.மு.க.,
பா.ஜ., வெற்றிக்கு தமிழகத்தில் இருந்து கைகொடுத்த தி.மு.க.,
ADDED : நவ 14, 2025 11:58 PM

'பீஹாரில் பா.ஜ., கூட்டணி வெற்றிக்கு, தி.மு.க.,வும் ஒரு காரணம்' என, சமூக வலைதளங்களில், பலரும் விமர்சித்து வருகின்றனர்.
பீஹார் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு, ஆறு மாதங்களுக்கு முன்பே, அங்கு நடந்த எஸ்.ஐ.ஆர்., எனப்படும், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின்போது, 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக, காங்கிரஸ், ஆர்.ஜே.டி., உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி கட்சிகள் குற்றஞ்சாட்டின.
'மஹாராஷ்டிராவில் ஓட்டு திருட்டு வாயிலாகவே, பா.ஜ., வென்றது' என குற்றஞ்சாட்டிய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பீஹாரிலும் ஓட்டு திருட்டு நடப்பதாகக் கூறி, கடந்த ஆக., 17 முதல் 15 நாட்கள் 'வாக்காளர் அதிகார யாத்திரை' என்ற பெயரில் பயணம் மேற்கொண்டார்.
பாட்னாவில், ஆக., 27ல் நடந்த யாத்திரையில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது ராகுல், ஸ்டாலின், ஆர்.ஜே.டி., தலைவர் தேஜஸ்வி ஆகியோர் இருக்கும் படத்தை வெளியிட்டு, தமிழகத்தில் பணியாற்றும், பீஹார் மக்களை இழிவுபடுத்தும், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை அழைத்து வந்து, ராகுலும், தேஜஸ்வியும் பீஹாரிகளை அவமானப்படுத்தி விட்டதாக பா.ஜ., பிரசாரம் செய்தது.
பீஹாரில், தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசிய பிரதமர் மோடி, 'கர்நாடகா, தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்கள், பீஹார் மக்களை அவதுாறு செய்கின்றனர். தமிழகத்தில் பணியாற்றும், பீஹார் தொழிலாளர்களை தி.மு.க., துன்புறுத்துகிறது' என்றார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், 'தமிழகம் -- பீஹார் இடையே பகையை ஏற்படுத்த, பிரதமர் மோடி முயற்சிக்கிறார்' என்றார். ஆனாலும், மோடியின் பேச்சு, பீஹாரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
தேர்தல் பிரசாரத்தின்போது, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த, தேஜஸ்வி யாதவ், 'நாட்டிலேயே சிறந்த முதல்வர் யார்' என்ற கேள்விக்கு, 'தமிழக முதல்வர் ஸ்டாலின்' என பதில் அளித்தார்.
தேர்தல் பிரசாரத்தின்போது, இதை சுட்டிக்காட்டிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'தமிழகத்தில் ஆளும் தி.மு.க., பீஹார் மக்களை தொடர்ந்து இழிவுப்படுத்தி வருகிறது.
'ஆனால், அக்கட்சியின் தலைவரான முதல்வர் ஸ்டாலினை, தனக்கு பிடித்த முதல்வர் என, வெட்கமே இல்லாமல் தேஜஸ்வி கூறுகிறார்' என, விமர்சித்தார்.
பீஹார் மக்கள் குறித்து, தமிழக அமைச்சர் நேரு, தயாநிதி மாறன், பொன்முடி, ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராசா உள்ளிட்ட தி.மு.க., பிரபலங்கள் பேசியதை, ஹிந்தி மொழி பெயர்ப்புடன், பா.ஜ.,வினர் சமூக வலைதளங்களில் பரப்பினர்.
இந்தச் சூழலில், பீஹார் சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இதற்கு, 'பீஹார் மற்றும் வட மாநில மக்கள் குறித்து, தி.மு.க.,வினர் தொடர்ந்து வைத்த விமர்சனங்களே காரணம்' என, பீஹார் தேர்தல் முடிவுகளுக்கு பின், இண்டி கூட்டணி கட்சித் தலைவர்கள் சிலர் கூறுகின்றனர்.
'அந்த வகையில், பீஹாரில் பா.ஜ., கூட்டணி வெற்றிக்கு தி.மு.க.,வும் ஒரு விதத்தில் கை கொடுத்துள்ளது' என, ராகுல், ஸ்டாலின், தேஜஸ்வி ஆகியோர் இருக்கும் படத்துடன், சமூக வலைதளங்களில் பலரும் விமர்சிப்பதை காங்கிரசார் பலரும் ஆமோதிக்கின்றனர்.
- நமது நிருபர் --:

