போலீஸ் பூத்களில் விளம்பர பலகைகள்; சட்ட விரோதமாக அனுமதி பெற முயற்சி
போலீஸ் பூத்களில் விளம்பர பலகைகள்; சட்ட விரோதமாக அனுமதி பெற முயற்சி
UPDATED : செப் 19, 2024 08:41 AM
ADDED : செப் 18, 2024 10:41 PM

கோவை : தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோடு சந்திப்புகளில் உள்ள போலீஸ் பூத்களில், அரசு உத்தரவுக்கு மாறாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை, போலீசார் இன்னும் அகற்றவில்லை.
மாறாக, விளம்பர ஏஜன்சியினர் மூலம் மாநகராட்சி அலுவலகத்துக்கு பணம் செலுத்தி, முறைகேடாக அனுமதி பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்பிரச்னை, மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை மாநகர போலீஸ் எல்லைக்குள், 50 இடங்களில் புதிய வடிவமைப்புடன் போலீஸ் பூத்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதில், வர்த்தக நோக்கில், தனியார் நிறுவன விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன.
தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை ரோடுகளில் எவ்வித விளம்பர பலகைகளும் வைக்கக் கூடாது. இவ்விரு துறைகளில் அனுமதி மற்றும் தடையின்மை சான்று பெறாமல், தமிழக அரசின் அரசாணையை மீறி, விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன.
இது விதிமீறல் என்பதை, தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சுட்டிக்காட்டியதோடு, அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தக்கோரி, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
மாநில நெடுஞ்சாலைத்துறையில் இருந்தும், நினைவூட்டு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இவ்விரு கடிதங்களையும் மாநகர போலீஸ் அதிகாரிகள் அலட்சியப்படுத்தியதோடு, விளம்பர பலகைகளை அகற்றாமல், அரசாணையை தொடர்ந்து மீறி வருகின்றனர்.
தற்போது அரசாணையையும், சட்டத்தையும் பொருட்படுத்தாமல், விளம்பர ஏஜன்சியினர் மூலமாக மாநகராட்சி நகரமைப்பு பிரிவு வாயிலாக பணம் செலுத்தி, சட்ட விரோதமாக முறைப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இது, தமிழக அரசு மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவுகளை மீறிய செயல். இப்பிரச்னை குறித்து, கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ள, மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.