அரசு மருத்துவமனைகளில் 'பர்த் கம்பேனியன்' நடைமுறை; கர்ப்பிணியர் மன தைரியம் பெற நடவடிக்கை
அரசு மருத்துவமனைகளில் 'பர்த் கம்பேனியன்' நடைமுறை; கர்ப்பிணியர் மன தைரியம் பெற நடவடிக்கை
ADDED : அக் 25, 2025 05:11 AM

கர்ப்பிணியர் பிரசவ சிகிச்சையின் போது, அதற்கான அறையில், அவருக்கு நெருங்கிய ஒரு, 'அட்டெண்டர்' இருக்கும் நடைமுறை அரசு மருத்துவமனைகளில் அறிமுகமாகி உள்ளது.
தமிழகத்தில் மகப்பேறு உயிரிழப்புகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை, மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் துறை மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும், பிரசவத்துக்கு பிந்தைய அதிக ரத்தப்போக்கு, உயர்ரத்த அழுத்தம், ரத்தத்தில் கிருமி தொற்று மற்றும் திடீர் இதய பாதிப்பு காரணமாக, தாயின் உயிரை காப்பாற்றுவது பெரும் சவாலாக அமைகிறது.
இதனை தவிர்க்கவும், தாய், சேய் உயிர்காக்கும் வகையில், உயர்சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவமனைகளில், 'பாதுகாப்பான பிரசவ திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு சுகாதார மாவட்டம் வாரியாக, கர்ப்பிணியர் விபரம் சேகரிக்கப்பட்டு, 'பிக்மி' மற்றும் அரசு மருத்துவமனையில் செயல்படும், 'சீமாங்க்' மையங்களில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதில், இணைநோய், பிரசவகால உடல் நல பாதிப்பு, சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு, அதற்கேற்ப சிகிச்சை தரப்படுகிறது.
தற்போது, பிரசவத்திற்கு முன், பின் மட்டுமின்றி, பிரசவ சிகிச்சையின் போதே, கர்ப்பிணியருக்கு மனதைரியம் கிடைக்கும் வகையில், உடன் ஒரு, 'அட்டெண்டர்' இருக்க அனுமதிக்கப்படுகிறது. அவர், நெருங்கிய உறவினர், உடன் பிறந்தவர், மூதாட்டி என, எவரேனும் ஒருவராக இருக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா கூறுகையில், ''கர்ப்பிணியருக்கு பிரசவம் நடக்கும் போது, அதற்கான அறையில் எவரும் அனுமதிக்கப்படாமல் இருந்தது.
தற்போது, கர்ப்பிணியருக்கு மன தைரியம் கிடைக்கவும், ஊக்குவிக்கும் வகையில் ஒரு, 'அட்டெண்டர்' இருக்க அனுமதிக்கப்படுகிறது. இதன் வாயிலாக, சுகப்பிரசவத்தின் சதவீதம் அதிகரிக்கும்,'' என்றார்.
-நமது நிருபர்-:

