கருணாநிதி, ஸ்டாலின் வரிசையில் உதயநிதி; அறிவாலயத்தில் பிறந்த நாள் விழா ஏற்பாடு
கருணாநிதி, ஸ்டாலின் வரிசையில் உதயநிதி; அறிவாலயத்தில் பிறந்த நாள் விழா ஏற்பாடு
ADDED : நவ 25, 2025 04:34 AM

தி.மு.க., இளைஞரணி செயலரும், துணை முதல்வருமான உதயநிதி, தன் 48வது பிறந்த நாளை, முதன்முறையாக கட்சி தலைமையகமான அறிவாலயத்தில் கொண்டாடுகிறார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளின்போது, தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் தொண்டர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாழ்த்து தெரிவிப்பர்.
அப்போது, வித விதமான பரிசு பொருட்களையும் எடுத்து வந்து, கருணாநிதிக்கு தருவர். அதுபோல, முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளும், அறிவாலயத்தில் கொண்டாடப்பட்டு, தொண்டர்களின் வாழ்த்தை பெறுகிறார்.
இந்த வரிசையில், இந்த ஆண்டு, துணை முதல்வர் உதயநிதியின் பிறந்த நாளும், அறிவாலயத்தில் முதன்முறையாக கொண்டாடப்படுகிறது. உதயநிதியின் 48வது பிறந்த நாள், வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது.
சட்டசபை தேர்தல் நெருங்குவதால், அதை பிரமாண்டமாக கொண்டாட தி.மு.க.,வினர் திட்டமிட்டுள்ளனர்.
அன்றைய தினம், 50,000 தொண்டர்கள், அறிவாலயத்தில் வரிசையாக நின்று, உதயநிதிக்கு வாழ்த்து சொல்லவும், அவர்களின் வாழ்த்துகளை உதயநிதி நேரில் ஏற்றுக்கொள்ளவும் ஏற்பாடு நடைபெறுகிறது.
இது தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும், உதயநிதி பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
உதயநிதி நடிகராக இருந்தபோது, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தன் பட நிறுவன அலுவலகத்தில் பிறந்த நாளை கொண்டாடினார். முரசொலி அறக்கட்டளை நிர்வாகியான பின், அந்த அலுவலகத்தில் கொண்டாடினார்.
தி.மு.க., இளைஞரணி செயலரான பின், இளைஞரணி அலுவலகமான அன்பகத்திலும், துணை முதல்வரானதும், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அரசு இல்லத்திலும் கொண்டாடினார்.
தற்போது, தமிழக தேர்தல் களத்தில் அவருக்கு போட்டியாக, த.வெ.க., தலைவர் விஜய் உருவெடுத்துள்ளதால், தி.மு.க.,வினரை திரட்டி பிரமாண்டமாக பிறந்த நாளை கொண்டாட வசதியாக, அறிவாலயத்தில் ஏற்பாடு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

