இந்தியாவில் அமெரிக்காவுக்கு என்ன வேலை: தேர்தல் நிதி நிறுத்தம் குறித்து பா.ஜ., விமர்சனம்
இந்தியாவில் அமெரிக்காவுக்கு என்ன வேலை: தேர்தல் நிதி நிறுத்தம் குறித்து பா.ஜ., விமர்சனம்
ADDED : பிப் 16, 2025 11:46 PM

வாஷிங்டன்:இந்தியாவில் ஓட்டு சதவீதத்தை அதிகரிப்பதற்கான 182 கோடி ரூபாய் உட்பட, பல நாடுகளுக்கு வழங்கப்படும் 4,212 கோடி ரூபாய் நிதி உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்திய தேர்தலில் அமெரிக்காவுக்கு என்ன வேலை என பா.ஜ., கேள்வி எழுப்பி உள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். தேர்தல் பிரசாரத்தின் போதே, நாட்டின் செலவினங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
இதன்படி, டி.ஓ.ஜி.இ., எனப்படும் சிறந்த நிர்வாகத்துக்கான துறை என்ற அரசு சாரா துறையை உருவாக்கியுள்ளார். இதன் தலைவராக, பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் உள்ளார்.
உலகெங்கும் பல்வேறு வகையான திட்டங்களுக்கு அமெரிக்கா நிதி உதவி வழங்கி வருகிறது. இவற்றை, யு.எஸ்.ஏ.ஐ.டி., எனப்படும் அமெரிக்காவின் சர்வதேச நிதி உதவி முகமை என்ற அமைப்பு கண்காணித்து வருகிறது.
சமீபத்தில் இந்த அமைப்பைச் சேர்ந்த பலருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதைத் தவிர, அடுத்த உத்தரவு வரும்வரை எந்த ஒரு திட்டத்துக்கும் நிதி உதவி வழங்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.
ரூ.182 கோடி நிறுத்தம்
அமெரிக்கர்களின் வரிப்பணம் மற்ற நாடுகளுக்கு வழங்குவது நிறுத்தப்படும் என எலான் மஸ்க் கூறி வருகிறார். இதன்படி, பல நாடுகளுக்கான ராணுவம் மற்றும் பிற உதவிகளை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வரிசையில், இந்திய தேர்தல்களில் ஓட்டுப்பதிவை அதிகரிக்கும் திட்டத்துக்கு, 182 கோடி ரூபாயை அமெரிக்கா வழங்கி வந்தது. இதை நிறுத்துவதாக எலான் மஸ்க் நேற்று அறிவித்துஉள்ளார்.
இதுபோல, நம் அண்டை நாடான வங்கதேசத்தில் அரசியல் ஸ்திரத்தன்மைக்கான நிதி உட்பட பல நாடுகளில் பல திட்டங்களுக்கு வழங்கி வந்த, 4,212 கோடி ரூபாய் நிதியை நிறுத்துவதாக எலான் மஸ்க் உத்தரவில் கூறியுள்ளார்.
நோக்கம் என்ன?
பா.ஜ.,வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாள்வியா கூறியுள்ளதாவது:
இந்தியாவில் ஓட்டு சதவீதத்தை அதிகரிப்பதற்காக அமெரிக்கா எதற்கு நிதி அளிக்க வேண்டும்? இதனால் யாருக்கு பலன்? நிச்சயம் ஆளுங்கட்சிக்கு அல்ல. இந்திய ஜனநாயகத்தில் வெளிநாடுகள் திட்டமிட்டு ஊடுருவுவது நடந்து வருகிறது.
காங்கிரஸ் மற்றும் அதன் முன்னாள் தலைவர் சோனியா குடும்பத்துக்கு நெருக்கமான அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரசின் தொண்டு நிறுவனம் வாயிலாகவே இந்த பணம் வந்துள்ளது.
கடந்த 2012ல், தேர்தல் கமிஷன் மற்றும் ஜார்ஜ் சோரசின் தொண்டு நிறுவனம் தொடர்புடைய அமைப்புடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
தற்போது, நம் தேர்தல் கமிஷனின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பும் காங்கிரஸ் கட்சியே இதை செய்தது. இந்த நிதி நிறுத்தப்படுவதால், நம் தேர்தல் நடைமுறையில் மற்ற நாடுகளின் தலையீடு தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.