'முதல்வருக்கு ராஜ குற்ற தோஷம்' :அச்சமூட்டும் பா.ஜ., நிர்வாகி
'முதல்வருக்கு ராஜ குற்ற தோஷம்' :அச்சமூட்டும் பா.ஜ., நிர்வாகி
ADDED : நவ 13, 2025 01:56 AM

சேலம்: ''கோவில்களில் நடக்கும் குற்றங்களுக்கு, 'ராஜ குற்றம்' என, ஒன்று உண்டு. முதல்வர் உள்ளிட்ட ஆட்சியாளர்களுக்கு அந்த தோஷம் ஏற்படும்,'' என, ஜோதிடரும் தமிழக பா.ஜ., ஆன்மிகம், கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில அமைப்பாளருமான ஷெல்வி தாமோதர் தெரிவித்தார்.
பா.ஜ., ஆன்மிகம், கோவில் மேம்பாட்டு பிரிவு சார்பில், கோவை, சேலம், வேலுார் பெருங்கோட்ட மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. அதன் பிறகு, ஷெல்வி அளித்த பேட்டி:
விருதுநகரில் கோவில் காவலாளிகள் கொல்லப்பட்டது போல, மற்ற கோவில்களில் நடக்காமல் தடுக்க, போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
திருவண்ணாமலை கோவிலில், 30 ஆண்டாக, 150 கோடி ரூபாய் டிபாசிட் இருந்தது. கடந்த 3 ஆண்டில், டிபாசிட் முழுதும் காலியாகி விட்டது. கோவில் பணத்தை செலவு செய்வது குறித்து, நீதிமன்ற அறிவுறுத்தல், சட்டங்கள் இருந்தும் மதிக்கப்படவில்லை.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் அக்னி குண்ட விழாவை நிறுத்தி வைத்துள்ளனர். ஆகம விதிப்படி, தலைமுறை தலைமுறையாக, நடத்தப்படும் விஷயம் அது.
தமிழகத்தில் ஹிந்து கோவில்கள், ஹிந்து வழிபாட்டு முறைக்கு தான் சட்டம் போடுகின்றனர். கள்ளக்குறிச்சி பழைய மாரியம்மன் கோவில் இடத்தை ஆக்கிரமித்தவர்கள், நீதிமன்ற உத்தரவு வந்த பின்பும் காலி செய்ய மறுக்கின்றனர்.
தேவிகாபுரத்தில், பெரிய நாயகியம்மன் உடனுறை ஆலயத்தில் ஆகம விதிக்கு மாறாக, நந்தியம் பெருமானை உயர்த்தி, கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீப்பிடித்த மண்டபத்தை புதுப்பிக்காமல், கும்பாபிஷேகம் செய்கின்றனர்.
இதுபோன்று கோவில்களில் நடக்கும் குற்றங்கள், குளறுபடிகள் தொடர்ச்சியாக நடக்கும்போது, அது தோஷ வகைகளில் ராஜகுற்றமாக கருதப்படும்.
தமிழகத்தில் தொடர்ச்சியாக கோவில்களில் குற்றங்கள் நிகழ்வதால், முதல்வர் உள்ளிட்ட ஆட்சியாளர்களுக்கு அந்த தோஷம் ஏற்படும்.
தி.மு.க.,வில், தெய்வீக நம்பிக்கை உள்ளவர்களில், ஆன்மிக ஞானம் கொண்டவர்களை வைத்து குழு அமைத்து, கோவில்களின் பாரம்பரிய நடைமுறைகளை பாதிக்காதபடி செய்வது, அவர்களுக்குத்தான் நல்லது.
இப்படிப்பட்ட தோஷம் ஏற்பட்டால், எதிர்கால சிந்தனையாக அவர்களுக்கு எது இருக்குமோ, அது நடக்காமல் போகும்.
ஜோதிட ரீதியில், தமிழகத்தில் வரும் டிச., 20 வரை குழப்பம் இருக்கும். அதற்கு பின் தான், தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பது தெரிய வரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

