வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரம் எனக்குதான்: அன்புமணி
வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரம் எனக்குதான்: அன்புமணி
ADDED : நவ 13, 2025 01:13 AM

சென்னை: ''மாம்பழம் சின்னமும், 'பி' படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரமும் எனக்குதான் உள்ளது. அதை யாராலும் எதுவும் செய்ய முடியாது,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
பா.ம.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், சென்னையை அடுத்த அக்கரையில் நடந்தது. சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், வன்னியர் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி, வரும் டிசம்பர் 17ல் நடக்கவுள்ள சிறை நிரப்பும் போராட்டம், சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அன்புமணி பேசியதாவது:
வாழ்க்கை முழுதும் பா.ம.க.,வுக்கும், ராமதாசுக்கும் உண்மையாகத்தான் உழைத்தேன். இனிமேலும் அப்படித்தான் உழைப்பேன். இப்போது ஒரு மோசமான சூழல் உருவாகி விட்டது.
அந்த சூழ்நிலையில் தான் மக்களை சந்திக்க நடைபயணத்தை துவங்கினேன். இந்த பயணத்தில், பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். ராமதாசுடன் இருக்கும் தி.மு.க., கைக்கூலிகள் தங்களின் சுயநலத்திற்காக, அவரது பெயரை கெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
பா.ம.க., தலைவராக என்னை அங்கீகரித்து, மாம்பழம் சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ளது; அதை யாராலும் எதுவும் செய்ய முடியாது. கட்சி வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கும், 'ஏ, பி' படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரம் எனக்குத் தான் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
***

