'இண்டி' கூட்டணி நடத்திய ஆர்ப்பாட்டம்: 'கம்பி' நீட்டிய காங்.,கால் தி.மு.க., அதிருப்தி
'இண்டி' கூட்டணி நடத்திய ஆர்ப்பாட்டம்: 'கம்பி' நீட்டிய காங்.,கால் தி.மு.க., அதிருப்தி
ADDED : நவ 13, 2025 01:00 AM

சென்னை: சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., கூட்டணி கட்சிகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் பலர் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து, காங்கிரஸ் மாநில நிர்வாகிகளிடம், தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு, தனது அதிருப்தியை தெரிவித்ததாக, தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை, தேர்தல் கமிஷன் அறிவித்த பின், தி.மு.க., கூட்டணி கட்சிகள், ஓட்டுச்சாவடி வாரியாக, வாக்காளர்களை சரி பார்க்கும் பணிகளை மேற்கொண்டன.
38 பேர் குழு இந்நிலையில், சில தினங்களுக்கு முன், தமிழக காங்கிரசில், புதிய மாவட்டத் தலைவர்களை தேர்வு செய்ய, 38 பேர் கொண்ட தேர்வுக்குழு பட்டியலை, டில்லி மேலிடம் அறிவித்தது.
இந்த பட்டியலை கண்டதும், மாவட்டத் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் பதவிக்கு ஆபத்து வந்து விட்டது என தெரிய வந்ததும், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு, தி.மு.க., நிர்வாகிகளுடன் இணைந்து செல்வதை, நிறுத்திக் கொண்டனர்.
வி.சி.க., - ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.நீ.ம., போன்ற கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியில், வாக்காளர்களுக்கு உள்ள சந்தேகத்தை நீக்கி, கணக்கீட்டு படிவங்களை வழங்கி வருகின்றனர்.
ஆனால், இந்த பணியில், காங்கிரசார் ஈடுபடவில்லை என்ற புகார், தமிழகம் முழுதும் இருந்து, அறிவாலயத்திற்கு வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் தி.மு.க., கூட்டணி கட்சிகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தை, சென்னை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருச்சி என, பல்வேறு மாவட்டங்களில், காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் புறக்கணித்து உள்ளனர்.
புறக்கணிப்பு இந்த தகவல் டி.ஆர்.பாலுவுக்கு தெரியவந்ததும், அவர், தமிழக காங்கிரஸ் முன்னணி தலைவர்களிடம், 'தேர்தல் நேரத்தில் ஏன் இப்படி மாவட்டத் தலைவர்கள் புறக்கணிக்கின்றனர்?' எனக் கேட்டுள்ளார்.
'சட்டசபை தேர்தல் நெருக்கத்தில், இதெல்லாம் கூட்டணியை பலவீனப்படுத்தும்' என்றும் சொல்லி, அவர் தன்னுடைய வருத்தத்தையும் அதிருப்தியையும் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், நாகர்கோவிலில் தி.மு.க., கூட்டணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தை, வேறு காரணம் சொல்லி காங்கிரஸ் புறக்கணித்தது.
நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் எதிரில், நேற்று முன் தினம் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கான மேடையில் பின்பக்கம் அமைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டில்,
'காமராஜர் படம் வைக்கவில்லை; ராகுல் படம் ஸ்டாம்ப் சைசில் இருந்தது. அதனால், ஆர்ப்பாட்டத்தை புறக்கணித்தோம்' என, நாகர்கோவில் காங்கிரசார் தெரிவித்தனர்.
தகவல் இல்லை ஆர்ப்பாட்டம் தொடங்கி நடந்து கொண்டிருந்தபோது, தாமதமாக அங்கு வந்த சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.,வும், ஆர்ப்பாட்டம் முடியும் முன்னரே அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.
அவரிடம் இது குறித்து கேட்டபோது, 'இந்த விஷயத்தில் எனக்கு எந்தக் கருத்தும் இல்லை' என்று பதில் அளித்தார்.
இதற்கிடையில், புறக்கணிப்பு விவகாரத்துக்கு இது தான் காரணம் என, புது விஷயத்தை காங்கிரசார் சிலர் கூறினர்.
'வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் இருக்கும் முறைகேடுகளை வெளிக் கொண்டு வந்தது, காங்., முன்னாள் தலைவர் ராகுல்.
'ஆனால், அவர் குறித்து எந்தத் தகவலும் இல்லாமல் தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தியதால், அதை புறக்கணித்தோம்' என அவர்கள் கூறினர்.

