சி.எஸ்.ஐ., டயோசீஸ் தேர்தலில் மோதல்: பாதிரியாரை மிரட்டிய கும்பலால் பரபரப்பு
சி.எஸ்.ஐ., டயோசீஸ் தேர்தலில் மோதல்: பாதிரியாரை மிரட்டிய கும்பலால் பரபரப்பு
ADDED : நவ 13, 2025 12:38 AM

துாத்துக்குடி சி.எஸ்.ஐ., டயோசீஸ் திருமண்டல தேர்தலில் தோல்வியடைந்த கும்பல், பாதிரியார் வீட்டுக்குள் புகுந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விடுவதாக மிரட்டியும், ஒருவரை கத்தியால் குத்தியும் அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
துாத்துக்குடி, -நாசரேத் திருமண்டல சி.எஸ்.ஐ., டயோசீஸ் கிறிஸ்துவ அமைப்பை நிர்வகிக்கும் பிஷப், லே செயலர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கான தேர்தல், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
கடந்த, 2021ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், 2024 வரை பொறுப்பில் இருந்தனர்.
அதன் பிறகு தேர்தல் தள்ளிப்போனது. உயர் நீதிமன்ற உத்தரவில், ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் தற்போது புதிய பெருமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்து வருகிறது.
லே செயலர் பதவிக்கு எஸ்.டி.கே.ராஜன் தலைமையில் ஒரு அணியினரும், டி.எஸ்.எப்.நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமையில் இன்னொரு அணியினரும் போட்டியிடுகின்றனர்.
நவ., 9ம் தேதி அந்தந்த சர்ச்களில் தேர்தல் நடந்தது. துாத்துக்குடி அருகே நடுவக்குறிச்சியில் பலருக்கு ஓட்டு இல்லை என சர்ச்சை ஏற்பட்டு, தேர்தல் நிறுத்தப்பட்டது. செய்துங்கநல்லுாரில் பாஸ்டர் ஜோஸ்வா தலைமையில் நடந்த தேர்தலில், இரு அணியினரும் போட்டியிட்டனர்.
இதில், குறைவான ஓட்டுகள் பெற்ற துாத்துக்குடி மாவட்ட தி.மு.க., துணை செயலர் ஜெயகுமார் ரூபன் தலைமையில் மூன்று பேர் கும்பல், நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலி அருகே வி.எம்.சத்திரத்தில் பாஸ்டர் ஜோஸ்வாவின் வீட்டிற்குள் புகுந்து, தங்கள் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தகராறு செய்துள்ளது.
பெட்ரோல் சிதறி, பாஸ்டர் ஜோஸ்வாவின் மகன் மீதும் பட்டது. இதில் பதற்றமடைந்த பாஸ்டரின் மனைவி, போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வருவதற்குள், ஜெயகுமார் ரூபன் உட்பட மூன்று பேர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் அவர்கள், செய்துங்கநல்லுார் அருகே நாட்டார்குளத்தில் வசிக்கும் தங்கராஜ் என்பவரை கத்தி போன்ற ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.
இவர், சி.எஸ்.ஐ., தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட அணிக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும், செய்துங்கநல்லுார் மற்றும் பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- நமது நிருபர் -:

