சிறைகளில் விளக்கு, மின் விசிறிகளுக்கு 'ஸ்பான்சர்' கைதிகளை தேடும் காவலர்கள்
சிறைகளில் விளக்கு, மின் விசிறிகளுக்கு 'ஸ்பான்சர்' கைதிகளை தேடும் காவலர்கள்
ADDED : நவ 12, 2025 06:32 AM

தமிழக சிறைகளில் கைதிகளை, 'ஸ்பான்சர்' பிடித்து பழுதான மின் விளக்கு, மின் விசிறிகள், மோட்டார் பம்ப்களை காவலர்கள் மாற்றி வருகின்றனர். இதன் காரணமாக கைதிகளுக்கு, 'தாராள' சலுகைகள் தருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஒன்பது மத்திய சிறைகளின் கீழ் மாவட்ட சிறைகள், கிளை சிறைகள் உள்ளன. ஆயிரக்கணக்கான கைதிகளை பராமரிக்க நுாற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் உள்ளனர். சிறைகளில் கைதிகளுக்கான மின்விசிறிகள், 24 மணி நேரமும், 'நான் ஸ்டாப்' ஆக ஓடுவதால் அவை அடிக்கடி பழுதாகின்றன.
இதைச் சரிசெய்ய அரசுக்கு கடிதம் எழுதி, அனுமதி கிடைத்த பிறகு சரி செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விடும் என்பதால், செல்வாக்குள்ள கைதிகளை பிடித்து அவர்கள், 'ஸ்பான்சர்' மூலம் புது மின்விசிறிகளை காவலர்கள் பொருத்தி வருகின்றனர்.
இதேபோல, எல்.இ.டி., பல்ப், டியூப்லைட், தண்ணீருக்கான மின் மோட்டார் பழுதானால், கைதிகள் மூலமாகவே சரிகட்டுகின்றனர். இதனால், 'ஸ்பான்சர்' கைதிகளுக்கு சிறையில் தாராள சலுகைகள் வழங்கப்படுவதாக சக காவலர்களே குற்றஞ்சாட்டுகின்றனர். அவர்கள் கூறியதாவது:
போலீஸ் துறைக்கு தரும் முக்கியத்துவத்தை, சிறை துறைக்கு அரசு தருவதில்லை. அதனாலேயே, போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. மாவட்ட சிறைகளில், 'கிளீனிங்' பொருட்கள் வழங்க ஓராண்டுக்கு, 1500 ரூபாயும், கிளை சிறைகளுக்கு, 1000 ரூபாயும் அரசு தருகிறது.
இதை வைத்தே ஆண்டு முழுதும் பொருட்கள் வாங்க வேண்டுமாம். அதிகாரிகளும் அரசுக்கு எழுதி நிதி கேட்பதில்லை. இதனால், கைதிகளை, 'ஸ்பான்சர்' பிடிக்க வேண்டியுள்ளது.
லைட், மின் விசிறிகளை தவிர, சிறைக்கு தேவையான பாரா நோட்டுகள், பர்னிச்சர் பொருட்கள் முதற்கொண்டு பல பொருட்களை அவர்கள் மூலம் வாங்க வேண்டிய நிலையில் சிறைத்துறை உள்ளது.
இதனால், 'ஸ்பான்சர்' கைதிகளுக்கு சிறையில் சலுகைகள் காட்ட வேண்டியுள்ளது. சிறைத்துறை நேர்மையாக இருக்க வேண்டும் என்று கருதும் டி.ஜி.பி.,மகேஸ்வர் தயாள், அடிப்படை தேவைகளுக்கு தேவையான நிதியையும், காவலர்களுக்கு சலுகையும் அளிப்பது தான் தீர்வாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
-- நமது நிருபர் -:

