பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை குழுவினர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை குழுவினர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை
ADDED : செப் 09, 2024 05:06 AM

ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கையை வெற்றிகரமாக நடத்தி முடிக்க, தமிழக பா.ஜ.,வில் ஏழு ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், கட்சி பணி தவிர, மற்ற எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ.,வில், அக்டோபர் 15க்குள், ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தமிழகம் முழுதும் உள்ள ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும், 200 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என, பா.ஜ., மேலிடம் வலியுறுத்தி உள்ளது.
உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த மாநில அளவில், மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் கவர்னர் தமிழிசை, தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா, தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலர்கள் ஏ.பி.முருகானந்தம், ராம சீனிவாசன், மாநில செயலர் வினோஜ் செல்வம் ஆகிய ஏழு பேர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த ஒருங்கிணைப்பாளர்களின் கட்டுப்பாட்டில் கட்சியினர், வீடு வீடாக சென்று உறுப்பினர்ளை சேர்க்க வேண்டும். அதேநேரத்தில், ஒருங்கிணைப்பாளர்கள் கட்சி பணி தவிர, வேறு எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -