பா.ஜ., மாநில நிர்வாகிகள் நியமனம்; டெல்டா மாவட்டங்களுக்கு 'டாட்டா'
பா.ஜ., மாநில நிர்வாகிகள் நியமனம்; டெல்டா மாவட்டங்களுக்கு 'டாட்டா'
ADDED : ஆக 02, 2025 03:20 AM

திருச்சி : தமிழக பா.ஜ., நிர்வாகிகள் நியமனத்தில், டெல்டா மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு, சென்னைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருப்பது, அக்கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட மாநில நிர்வாகிகள் பட்டியலில், துணைத் தலைவர்களாக குஷ்பு, சசிகலா புஷ்பா உட்பட 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுச் செயலர், இளைஞர் அணி தலைவர், மாநில செயலர் என பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 51 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனத்தில், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கட்சி ரீதியாக திருச்சியை பெருங்கோட்டமாக பா.ஜ., வைத்துள்ளது.
அதில், திருச்சி, புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலுார், ராமநாதபுரம், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் அடங்கியுள்ளன.
ஆனால், மாநில நிர்வாகிகள் பட்டியலில், திருச்சி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, அரியலுார் மாவட்டங்களில், ஒருவருக்கு கூட பொறுப்பு வழங்கவில்லை.
திருச்சிக்கு, 20 ஆண்டுகளுக்கு மேலாக முக்கிய மாநில நிர்வாகிகள் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை.
திருவாரூர் தவிர, மற்ற டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இது, பா.ஜ.,வினர் மத்தியில் சோர்வை ஏற்படுத்தி உள்ளது.
அதே நேரத்தில், 14 துணைத் தலைவர்களில், தென் சென்னையில் இருந்து மட்டும் குஷ்பு, ஜெயபிரகாஷ், டால்பின் ஸ்ரீதர், வி.பி.துரைசாமி ஆகிய நால்வர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும், 14 துணைத் தலைவர்களில், எட்டு பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்; அறிவிக்கப்பட்ட 51 நிர்வாகிகளில், 23 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.