அமைச்சர்கள் உள்ளிட்டோரை லோக்சபா தேர்தலில் இறக்க பா.ஜ., திட்டம்
அமைச்சர்கள் உள்ளிட்டோரை லோக்சபா தேர்தலில் இறக்க பா.ஜ., திட்டம்
ADDED : பிப் 15, 2024 05:01 AM

ராஜ்யசபாவில் காலியாகும் 56 இடங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதில், தற்போது பா.ஜ., வசம் உள்ள 28 இடங்களை அது தக்க வைப்பது நிச்சயமாகியுள்ளது. பதவிக்காலம் முடியும் இந்த 28 பேரில், நான்கு பேருக்கு மட்டுமே மறுவாய்ப்பை பா.ஜ., அளித்துள்ளது. மீதமுள்ளவர்களை, மக்கள் ஆதரவை பெறும் வகையில், லோக்சபாவில் களமிறக்கவும் கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது.
ராஜ்யசபாவில் வரும் ஏப்., மாதம் காலியாக உள்ள 56 இடங்களுக்கு, வரும் 27ல் தேர்தல் நடக்க உள்ளது. இதில், பா.ஜ.,வைச் சேர்ந்த 28 பேரும் அடங்குவர். இதில், ஒன்பது பேர் மத்திய அமைச்சர்கள்.
வாய்ப்பு
கட்சிக்காக உழைத்த, பெரிய அளவில் வெளியில் தெரியாதவர்களை கவுரவிக்கும் நடைமுறையை, பா.ஜ., தலைமை மீண்டும் மேற்கொண்டுள்ளது. பிராந்திய மற்றும் பல்வேறு சமூக கணக்குகளை முன்வைத்து, ராஜ்யசபா வேட்பாளர் தேர்வை கட்சித் தலைமை மேற்கொண்டு உள்ளது.
இதன்படி, தற்போது பதவிக்காலம் முடியும் 28 பேரில், நான்கு பேர் மட்டுமே மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், கட்சித் தலைவர் நட்டா, இரண்டு மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், முருகன் அடங்குவர். சிறந்த பேச்சாளரான தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதிக்கும் மறுவாய்ப்பு தரப்பட்டுஉள்ளது.
பா.ஜ.,வில் அனைவருக்கும் பதவி அளிப்பதை உறுதி செய்யும் வகையில், நட்டாவைத் தவிர, இரண்டு முறைக்கு மேல் ராஜ்யசபா எம்.பி., பதவி யாருக்கும் தரப்படவில்லை. நட்டா தற்போது மூன்றாவது முறையாக ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார்.
தற்போது மத்திய அமைச்சரவையில் உள்ள ஏழு அமைச்சர்களின், ராஜ்யசபா எம்.பி., பதவி முடிவுக்கு வருகிறது. தர்மேந்திர பிரதான், பூபேந்திர யாதவ், ராஜிவ் சந்திரசேகர், மன்சுக் மாண்டவியா, புருஷோத்தம் ரூபலா, நாராயணன் ரானே, வி.முரளீதரன் ஆகியோருக்கு மறுவாய்ப்பு தரப்படவில்லை.
இதுபோல, பல மூத்த தலைவர்களுக்கும் மறுவாய்ப்பு தரப்படவில்லை. இவர்களில் பெரும்பாலானோர், லோக்சபா தேர்தலில் களமிறக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதரவு
பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்பதை பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். அதன்படி, கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த பீஹாரின் தரம்ஷிலா குப்தா, மஹாராஷ்டிராவின் மேதா குல்கர்னி, மத்திய பிரதேசத்தின் மாயா நரோலியா ஆகியோர், ராஜ்யசபா வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதுபோல, கட்சியின் தேசிய நிர்வாகிகள் யாருக்கும், ராஜ்யசபா தேர்தலில் வாய்ப்பு தரப்படவில்லை. முருகன், மத்திய பிரதேசத்தில் இருந்தும்; அஸ்வினி வைஷ்ணவ், ஒடிசாவில் இருந்தும் நிறுத்தப்படுகின்றனர். அஸ்வினி வைஷ்ணவுக்கு, ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் ஆதரவு தெரிவித்துள்ளது.
நட்டா, குஜராத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரசில் இருந்து சமீபத்தில் இணைந்த, மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான், மஹாராஷ்டிராவில் நிறுத்தப்பட்டுள்ளார்.
- நமது சிறப்பு நிருபர் -

