'ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை': ஸ்டாலின் கேட்ட கேள்விகளுக்கு பா.ஜ., பதில்
'ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை': ஸ்டாலின் கேட்ட கேள்விகளுக்கு பா.ஜ., பதில்
ADDED : அக் 20, 2025 02:19 AM

சென்னை: 'பாக்ஸ்கான் நிறுவனம் செய்யாத முதலீட்டை, வந்ததாக, 'வாட்ஸாப் யூனிவர்சிடியில்' பொய் பிரசாரம் செய்த முதல்வர் ஸ்டாலின், மற்றவரை பார்த்து ஏளனம் செய்கிறார்' என, தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
பா.ஜ.,வுக்கு ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள் ஒவ்வொன்றுக்கும், பதில் அளித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கூறியிருப்பதாவது:
ஊழல்வாதிகள் பா.ஜ., கூட்டணிக்கு வந்த பின், ஊழலை வாஷிங் மிஷினில் வெளுப்பது எப்படி?
செந்தில் பாலாஜியை அருகில் வைத்துக்கொண்டு, கண்ணாடியை பார்த்தபடி, ஸ்டாலின் பேசுவதை உணர முடிகிறது.
நாட்டின் முக்கிய திட்டங்கள், சட்டங்களுக்கு ஹிந்தி, சமஸ்கிருதத்தில் மட்டுமே பெயரிடுவது என்ன மாதிரியான ஆணவம்?
இந்தியாவின் அலுவல் மொழி ஹிந்தி என்பது கூட அறியாமல், இந்த கேள்வியை ஸ்டாலின் கேட்டிருந்தால், அது அறியாமை; அறிந்தே கேட்டிருந்தால் ஆணவம்.
மத்திய அமைச்சர்களே, நம் குழந்தைகளை அறிவியலுக்கு புறம்பான மூடநம்பிக்கைகளை சொல்லி மட்டுப்படுத்துவது ஏன்?
அறிவியலை நம்பிக்கைகளின் வழியே விதைக்கும் பெரும்பான்மை ஹிந்து மதத்தை, சனாதன தர்மத்தை, சிறுபான்மையினரின் ஓட்டுக்காக, முதல்வரும், துணை முதல்வரும் அவதுாறு செய்து, இழித்து பேசி சிதைப்பது ஏன்?
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், கவர்னர்களை வைத்து குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?
எதிர்க்கட்சியாக இருந்தபோது, நீங்கள் கவர்னரை சந்தித்து, குழப்பம் விளைவித்து என்ன சாதித்தீர்கள் என சொல்லுங்கள். நாங்களும் அதை சாதிக்கிறோம்.
பா.ஜ., தேர்தல் வெற்றிக்காக, மக்களின் ஓட்டுகளை பறிக்கும் திருட்டை ஆதரிப்பது ஏன்?
ஓட்டு திருட்டு, கள்ள ஓட்டு, ஓட்டுச்சாவடி வன்முறை, ஓட்டுக்கு காசு, தேர்தல் முடிவையே மிரட்டி மாற்றும் வன்மை, போட்டியாளர்களை கொச்சைப்படுத்தி இழிவுபடுத்துவது தி.மு.க., தான்.
மேலும், ஓட்டுக்காகவும், அது தரும் பதவிக்காகவும், அந்த பதவி தரும் சுகத்திற்காகவும், மக்களின் சுதந்திரத்தை, ஜனநாயகத்தை சீர்குலைத்த முதல் கட்சி தி.மு.க.,தான். இதை உலகமே அறிந்த நிலையில், போலி வாக்காளர்களை நீக்குவதற்கு எதிராக, நீங்கள் பேசுவதில் வியப்பு ஏதும் இல்லை.
இரும்பின் தொன்மை குறித்து, அறிவியல்பூர்வமாக தமிழகம் மெய்ப்பித்த அறிக்கையை கூட அங்கீகரிக்க மனம் வராதது ஏன்?
தமிழகத்தின் தொன்மை , தொல்லியல் அருமை, பெருமை சிறப்பானது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், இந்தியா முழுதும் தொல்லியல் துறை ஆராய்ச்சி தொடரும் நிலையில், ஆராய்ச்சி முடிவை, இப்போதே வெளியிட வேண்டும் என்பது முறையல்ல. தொல்லியலில் அரசியலை கலப்பது பெருமையல்ல.
கீழடி அறிக்கையை தடுக்க, குட்டிக்கரணங்கள் போடுவது ஏன்?
கீழடி ஆராய்ச்சியை துவக்கியேதாடு, அதன் முதல் இரண்டு ஆய்வு அறிக்கைகளும், மத்திய தொல்லியல் துறையினுடையதுதான் என்பது உங்களுக்கு தெரியுமா? தொல்லியல் துறை என்பது அரசியல் அறிக்கை அல்ல; பொறுமைதான் பெருமை சேர்க்கும்.
இதற்கெல்லாம் பதில் வருமா?
உங்கள் கேள்விகளுக்கெல்லாம் இந்த பதில்கள் போதுமா; இன்னும் கொஞ்சம் வேணுமா.
இல்லை. வழக்கம்போல, வாட்ஸாப் யூனிவர்சிட்டியில் பொய் பிரசாரத்தை துவக்குவீர்களா?
'பாக்ஸ்கான்' நிறுவனம் செய்யாத முதலீட்டை, தமிழகத்துக்கு வந்து விட்டதாக கூறி, 'வாட்ஸாப் யூனிவர்சிடியில் பொய் பிரசாரம் செய்த நீங்கள், மற்றவர்களை பார்த்து ஏளனம் செய்கிறீர்களே? 'ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை'. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.